"திமுகவை ஆம்புலன்சில் ஏற்றி வென்டிலேட்டருக்கு அனுப்புங்கள்..." எடப்பாடி பழனிச்சாமி பொதுமக்களிடம் கோரிக்கை.!!
Tamilspark Tamil September 10, 2025 11:48 AM

மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற கொள்கையோடு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தமிழக முழுவதும் சுற்றுப்பயணம் செய்து சட்டமன்றத் தேர்தலில் அதிமுக ஆட்சி அமைப்பதற்காக மக்களிடம் பிரச்சாரம் செய்து வருகிறார். தனது இரண்டாம் கட்ட பிரச்சாரத்தை மதுரையிலிருந்து துவக்கிய அவர் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 126 அடி உயர அதிமுக கொடி கம்பத்தில் கட்சி கொடியை ஏற்றினார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், வர இருக்கின்ற தேர்தலில் மக்கள் திமுகவை வீட்டிற்கு அனுப்புவார்கள் என கூறினார்.

கொடியேற்ற நிகழ்ச்சிக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய எடப்பாடி பழனிச்சாமி தமிழகத்தில் புதிய மாவட்டங்கள் மற்றும் புதிய மருத்துவக் கல்லூரிகள் அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்டது என தெரிவித்தார். மேலும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தை தனியாக அமைத்து அந்த மாவட்டத்திற்கு உடனடியாக மருத்துவக் கல்லூரியை கொண்டு வந்ததும் அதிமுக தான் எனக் கூறினார். திமுக அரசும் திமுக அமைச்சர்களும் மக்களை ஒருபோதும் மதிக்கவில்லை என எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டினார். அரசு இலவச பஸ்ஸில் செல்லும் மக்களை பார்த்து ஓசி பஸ் எனக் கூறிய முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு ஆண்டவன் தண்டனை வழங்கியதாக எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.

திமுக அமைச்சர்கள் மக்களை ஒருபோதும் மதிக்காமல் கீழ்த்தரமாக நடத்துவார்கள். சமீபத்தில் துப்புரவு பணியாளர்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளும் அதற்கு ஒரு சான்று என அவர் கூறினார். வர இருக்கின்ற சட்டமன்றத் தேர்தலில் தமிழக மக்கள் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு தகுந்த பாடத்தை புகட்டுவார்கள் என எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார். திமுக கட்சி கூடிய சீக்கிரமே வென்டிலேட்டரில் ஏற்றப்படும் எனவும் அவர் தெரிவித்தார். மேலும் உதயநிதி ஸ்டாலின் பேசியதற்கு பதிலடி கொடுத்திருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி.

இதையும் படிங்க: "விஜய் மட்டுமல்ல யாராலும் எடப்பாடி பழனிச்சாமியை தடுக்க முடியாது..." முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி பேட்டி.!!

இது தொடர்பாக பேசிய அவர், உதயநிதி ஸ்டாலின் நிதானமாக பேச வேண்டும். எங்களுக்கும் வாய் இருக்கிறது. சிந்தனையும் இருக்கிறது. நாங்கள் பேசினால் நீங்கள் தாங்க மாட்டீர்கள் என கூறினார். வர இருக்கின்ற தேர்தலில் மக்கள் திமுக அரசை ஆம்புலன்ஸில் ஏற்றி அனுப்ப வேண்டும் எனவும் அவர் பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டார்.

இதையும் படிங்க: "அடிமைகளாலும், அடக்குமுறைகளாலும் திமுகவை வீழ்த்த முடியாது..." காஞ்சிபுரத்தில் உதயநிதி ஸ்டாலின் பேட்டி.!!

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.