கோவிலில் அதிர்ச்சி! சிறுவன் கைபிடித்த மர்ம 'ஸ்பிரே'...! காவலர்கள் மர்மத்தை அவிழ்க்க விசாரணை...!
Seithipunal Tamil September 10, 2025 06:48 AM

நேற்று இரவு 8 மணியளவில், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்தது. அங்கு சிறுவன் ஒருவன் 'சில்லி ஸ்பிரே'யை அருகில் இருந்தவர்கள் திடீரென முகத்தில் பயன்படுத்தியதால் அவர்களுக்கு மூச்சுத்திணறல் மற்றும் கண் எரிச்சல் ஏற்பட்டது. உடனே இந்த சம்பவத்தை கோவில் நிர்வாகத்திற்கு தெரிவித்தனர், அங்கு வந்த பணியாளர்கள் அந்த சிறுவனை அலுவலகத்துக்கு அழைத்து விசாரணை நடத்தினர்.

இந்த  விசாரணையில், சிறுவன் தனது சொந்த ஊர் திருப்பூர் மற்றும் உறவினர்களுடன் கோவிலுக்கு வந்ததாக தெரிவித்தான்.அப்போது, சிறுவனுடன் இருந்த மற்ற 3 சிறுவர்களையும் விசாரணைக்கு அழைத்த போது, அவர்கள் முன்னுக்குப்பின் முரணான தகவலை தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

உடனே கோவில் நிர்வாகம் காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தது. சம்பவ இடத்திற்கு வந்த காவலர்கள் சிறுவனிடம் விசாரணை நடத்தினர். அப்போது சிறுவர்கள் தெரிவித்ததாவது," அவர்கள் பயன்படுத்திய ‘சில்லி ஸ்பிரே’ அந்த இடத்தில் நின்ற ஒரு காரின் கீழ் கிடைத்தது எனவும், அதில் ஒருவரின் தாய் கோவிலில் பக்தர்களிடம் யாசகம் பெற்று வந்துள்ளார் என்பதும் தெரியவந்தது.

அதன் பிறகு காவலர்கள் சிறுவன் தாயாரையும் விசாரணை செய்த போது, அவர்கள் கூறிய தகவலும் முரணாக இருந்தது. இதையடுத்து, காவலர்கள் அவர்கள் அனைவரையும் காவல் நிலையத்துக்கு அழைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையில், அந்த ‘சில்லி ஸ்பிரே’ பக்தர்களின் நகை, பணத்தை எடுக்க மர்ம நபர்கள் கொண்டு வந்ததா? அல்லது பெண்கள் தற்காப்புக்காக விட்டு சென்றதா?, மற்றும் அது எப்படி சிறுவனின் கையில் கிடைக்கப்பெற்றது? என்பதைப் பற்றியும் காவலர்கள் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.