அதிமுக ஒன்றாக இருக்கிறது என்பதை தேர்தல் வெற்றி நிரூபிக்கும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம் கூறியுள்ளார்.
கோவை வால்பாறை தொகுதி ஆனைமலை பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட எடப்பாடி பழனிசாமி, “திமுக ஆட்சிக்கு வந்து 52 மாதம் முடிந்துவிட்டது. இந்த ஆட்சியில் வால்பாறை தொகுதிக்கு புதிய திட்டம் ஏதாவது கொண்டு வந்தார்களா? தேர்தல் நேரத்தில் 525 அறிவிப்புகளை வெளியிட்டு, ஆட்சி வந்ததும் மக்களை மறந்துவிட்டார்கள். அதிமுக ஒரே ஆட்சியில் தான் இரண்டு முறை விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்தோம். மும்முனை மின்சாரம் 24 மணி நேரம் கொடுத்தோம். மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்ததும் திருமண உதவி தொகையோடு மணப்பெண்ணுக்கு பட்டுச்சேலை, மணமகனுக்கு பட்டுவேட்டி கொடுக்கப்படும். லேப்டாப் வழங்கும் திட்டம். அதிமுக ஆட்சியின் 10 ஆண்டு காலத்தில் 7,300 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில், 52 லட்சத்து 35 ஆயிரம் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 12 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள லேப்டாப் கொடுக்கப்பட்டது. மாணவர்களுக்கு அறிவுபூர்வமான கல்வி கிடைக்க அதிமுக அரசு செயல்படுத்தியது. அதையும் திராவிட மாடல் அரசு நிறுத்திவிட்டது. ஏழை, விவசாயத் தொழிலாளி, தாழ்த்தப்பட்ட, மலைவாழ், மீனவ மக்களுக்கு மனை இருந்தால் அதில் அரசு சார்பில் கான்கிரீட் வீடுகள் கட்டிக்கொடுக்கப்படும். மனை இல்லாதவர்களுக்கு அரசே மனையை வாங்கி, கான்கிரீட் வீடுகளைக் கட்டிக்கொடுக்கும். மலையில் இருந்தாலும் சரி இப்பகுதியில் இருந்தாலும் சரி கட்டிக்கொடுப்போம். மக்கள் பாராட்டும் அளவுக்கு வீடுகள் இருக்கும்.
அதிமுக ஐசியுவில் இருக்கிறது என்கிறார் உதயநிதி. அப்படியா இருக்கிறது..? நீங்கள் நேரலையில் பாருங்கள், மக்கள் எழுச்சியோடு இருக்கிறார்கள். எப்போது தேர்தல் வருமென்று எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள். திமுகதான் ஐசியுவில் இருக்கிறது. எல்லா கட்சிகளிலும், விரும்பியவர்கள் கட்சியில் சேருவார்கள். திமுக செல்வாக்கை இழந்துவிட்டதால் வீடுவீடாகச் சென்று கெஞ்சி, கையெழுத்துப்போடுங்க என்று கேட்கும் அவலநிலை திமுகவுக்கு வந்திருக்கிறது. திமுகவுக்கு மருத்துவமனையில் வென்டிலேட்டர் பொருத்தப்பட்டுள்ளது. வென்டிலேட்டர் இருக்கும்வரைதான் உயிர் இருக்கும். அதை எடுத்துவிட்டால் உயிர் போய்விடும். அதுபோல இன்னும் 7 மாதம் தான் இருக்கிறது. அதுவரையே அதிகாரம், அதிகாரத் திமிரில் பேசுவதை விட்டுவிட்டு, மக்களுக்குத் தேவையான நன்மைகளை செய்யுங்கள். அதோடு அதிமுக மூன்றாக, நான்காகப் போய்விட்டது என்கிறார்கள். எல்லாமே ஒன்றாக இருக்கிறது என்பதை சட்டமன்றத் தேர்தலிலே காண்பிப்போம்.
திமுகவினர் கூட்டணி பலத்துடன் இருப்பதாகச் சொல்கிறார்கள். அதிமுக கூட்டணியைப் பொறுத்தவரை மக்களையே நம்பியிருக்கிறது. மக்கள் தான் யார் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதை தீர்மானிப்பது. கூட்டணி தன்னை காப்பாற்றும் என்று ஸ்டாலின் நினைக்கிறார், ஆனால் மக்கள் அந்த நிலைப்பாட்டில் இல்லை, அதிமுக ஆட்சி மலர வேண்டும் என்ற நிலைப்பாட்டில் மக்கள் உள்ளனர். திமுக கொள்கைதான் எல்லா கூட்டணிக் கட்சிகளுக்கும் இருக்கிறதாம், அப்படியெனில் ஒரே கட்சியாகிவிடலாமே, ஏன் தனித்தனி கொள்கை? அதிமுகவுக்கும் பாஜகவுக்கும் தனித்தனி கொள்கை உள்ளது. ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு கொள்கை இருக்கிறது. தனித்தனி கட்சி நடத்த வேண்டிய அவசியமில்லை. அதிமுகவைப் பொறுத்தவரை கூட்டணி என்பது தேர்தல் நேரத்தில் அமைக்கப்படுவது, கொள்கை என்பது நிலையானது. அந்த கொள்கை அடிப்படையில்தான் கட்சி செயல்படும். திமுக அப்படியல்ல, கூட்டணிக் கட்சிகளை ஏமாற்றி விழுங்கிக் கொண்டிருக்கிறது. உஷாராக இருந்தால் நீங்கள் உங்கள் கட்சியைக் காப்பாற்றிக்கொள்ளலாம் இல்லையெனில் தேர்தலுக்குள் உங்கள் கட்சியை திமுக விழுங்கிவிடும். கூட்டணியை உடைப்பதற்காக எடப்பாடி பேசுவதாகச் சொல்கிறார்கள், நாங்கள் உடைக்கத் தேவையில்லை, நீங்களே உடைந்துபோவீர்கள். ஏனென்றால், கம்யூனிஸ்ட் கட்சி அப்படித்தான் பேசுகிறார்கள். 98% வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றவில்லை, தவறான கணக்காக இருக்குது என்கிறார்கள். அப்படியெனில் கூட்டணிக்குள் முரண்பட்ட கருத்து இருக்குது என்றுதானே அர்த்தம். தேர்தல் வரை தாக்குப்பிடிக்குமா என்பதை பொருத்திருந்து பார்ப்போம்” என்றார்.