Gandhikannadi: கே பி ஒய் பாலா நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் காந்தி கண்ணாடி. அந்த படத்திற்கு திரையரங்குகள் ஒதுக்கப்படவில்லை, எங்களுக்கு எதிராக சில பேர் வேலை பார்க்கிறார்கள் என்றெல்லாம் அந்த படத்தின் இயக்குனரும் கே பி ஒய் பாலாவும் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியிருந்தார்கள். இது ஒரு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஏனெனில் ஒரு வளர்ந்து வரும் நடிகராக இருக்கும் பாலாவுக்கு அப்படி யார் எதிரிகள் இருக்கிறார்கள் என்பது பலரின் கேள்வியாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் வலை பேச்சு அந்தணன் கே பி ஒய் பாலாவின் இந்த கருத்துக்கு பதிலடி கொடுத்திருக்கிறார்.
இதோ அவர் கூறியது: பணம் இருக்கும் ஒருவரிடம் மனசு இருக்காது. மனசு இருக்கும் ஒருவரிடம் பணம் இருக்காது. இந்த இரண்டும் இருப்பவர்கள் மிகவும் அரிது. அதில் எம்ஜிஆர் ஒருவரை சொல்லலாம். தான் சம்பாதித்து தானே சேர்த்து தானே வாழனும்னு நினைக்கிற இந்த சமூகத்தில் தான் சம்பாதித்ததை அப்படியே மற்றவர்களுக்கு கொடுக்க வேண்டும் என நினைக்கிறது எல்லாம் சாதாரண விஷயமே கிடையாது. மிகப் பெரிய மனசு. அவர்கள் நேரடியாக கடவுளால் பூமிக்கு அனுப்பப்பட்டவர்கள் என நம்புகிறவன் நான். அப்படி ஒருத்தராக தான் பாலாவை நான் தொடர்ந்து பார்த்து வருகிறேன்.
எதிர்வரும் காலங்களிலும் நான் பார்க்க போகிறேன். பாலா மாதிரியான ஆட்கள் ஜெயித்தால் அவரால் ஒரு ஆயிரம் பேர் இங்கு பொழைப்பார்கள் என்பது ஒரு அசைக்க முடியாத நம்பிக்கை. நீண்ட காலமாக பாலாவை பார்த்து வருகிறோம். ஒரு பக்கம் அவரை புகழ்ந்து கொண்டே வருகிறோம். இதுதான் மற்றவர்களின் மனநிலையாகவும் இருக்கிறது. இந்த நேரத்தில் பாலா நடித்து காந்தி கண்ணாடி என்ற ஒரு படம் வெளியாகி இருக்கிறது. இந்த படம் வந்த பிறகு சோசியல் மீடியாவில் ஒரு பெரிய விவாதம் போய்க்கொண்டே இருக்கிறது. இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் ஒரு பக்கம் கே பி ஒய் பாலா மற்றும் அந்த படத்தின் இயக்குனர் இரண்டு பேருமே இந்த படத்தை திட்டமிட்டே யாரோ சரி செய்து முடக்குகிறார்கள் என்பது மாதிரி பேசி வருகிறார்கள்.
அதுதான் எனக்கு மிகப்பெரிய வருத்தம். தன்னுடைய படத்தை ஓட வைப்பதற்காக இல்லாத பொய் எல்லாம் கொண்டு வந்து சொல்வது மிகவும் தவறான விஷயம் .இதை தொடர்ந்து பாலாவும் சரி இயக்குனரும் சரி செய்து கொண்டு வருகிறார்கள். அதாவது இந்த படத்திற்கு விமர்சனம் பண்ண வேண்டும் என அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். அதில் ஒன்றும் தவறில்லை .ப்ளூ சட்டை மாறனும் அல்லது பிரசாந்தோ அல்லது எங்களைப் போன்றவர்களோ அதை செய்ய வேண்டும் என நினைக்கிறார்கள். உள்ளபடியே வலைப்பேச்சை பொறுத்த வரைக்கும் அது ரிவ்யூ பண்ணுகிற தளம் கிடையாது. செய்திகள் தான் முக்கியம்.
எப்பொழுதாவது தான் படங்களுக்கு நாங்கள் விமர்சனம் செய்வோம். வருடத்திற்கு 200 படம் வருகிறது என்றால் ஒரு 20 படங்களுக்கு மட்டும் தான் நாங்கள் விமர்சனம் செய்திருப்போம். ப்ளூ சட்டை மாதிரியான ஆட்கள் இந்த படத்தை ரிவ்யூ செய்து இருக்கலாம் என ஒரு பத்து ரிவ்யூவர்ஸ் போட்டோக்களை போட்டு பணம் கொடுத்தால்தான் இவர்கள் எல்லோரும் விமர்சனம் செய்வார்கள் என சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் உண்மையிலேயே காந்தி கண்ணாடி படத்தை ஏன் விமர்சனம் செய்யவில்லை என்றால் அதற்கு ஒரே காரணம் பாலா மனதை நோகடிக்க கூடாது என்பது மட்டும் தான் .
ஏனென்றால் படம் அப்படி இருக்கிறது .அதை விட்டுவிட்டு அந்த படத்தின் இயக்குனர் இந்த படத்தை முடக்க சதி என கூறிக்கொண்டு வருகிறார். இந்தப் படத்தை முடக்க அப்படி யார் சதி செய்கிறார்கள். பாலாவிற்கு எதிரிகள் யார் இருக்கிறார்கள் .சிம்பு சிவகார்த்திகேயன் தனுஷ் இவர்கள் படம் எல்லாம் வரும் பொழுது இந்த மாதிரி இருக்கும். ஆனால் பாலா மாதிரி வளர்ந்து வருகிற ஒரு பையன் அதுவும் எல்லோருக்கும் பிடித்தமான ஒரு பையன் நடித்த ஒரு படத்தை முடக்க வேண்டும் என யார் நினைக்கப் போகிறார்கள். எல்லா படமும் வருகிற மாதிரி அந்த படமும் வந்து ஓடட்டும்.
இன்னொரு விஷயம் பெரிய படங்கள் வரும்பொழுது சின்ன படங்களுக்கு தியேட்டரில் இடம் கொடுக்க மாட்டார்கள். ஏனெனில் அது தியேட்டர்காரங்களுக்கு உள்ள பிரச்சனை. ஆளே வராமல் ஒரு தியேட்டருக்கு ஏசியை போட்டு ஆட்களுக்கு சம்பளம் கொடுத்து அது சாதாரண விஷயம் கிடையாது.
எனக்கு தெரிந்த ஒரு தியேட்டர் உரிமையாளரிடம் கூட நான் இதைப் பற்றி கேட்டேன் .அதற்கு அவர் ஆள் வந்தால் ஏன் நான் தியேட்டரை மூட போகிறேன். காந்திகண்ணாடி படத்துக்கு யாருமே வரவில்லை என்று தான் கூறுகிறார். படத்தை ஒழுங்கா எடுத்தால் ஆள் வரப் போகிறார்கள் ஒன்னுமே இல்லாத படத்தை மேலும் விமர்சனம் செய்தால் அது அந்த படத்துக்குத்தான் பாதிப்பு என அந்தணன் கூறியிருக்கிறார்.