ஆசிய கோப்பை: இந்தியாவிடம் சண்டையின்றி சரணடைந்தது யுஏஇ - பாகிஸ்தானுக்கு போக்கு காட்டிய அணியை சுருட்டியது எப்படி?
BBC Tamil September 11, 2025 06:48 PM
Getty Images

துபாயில் நடைபெற்ற ஆசிய கோப்பையின் இரண்டாவது ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இந்தியா, யூஏஇ அணிகள் மோதின. நீண்ட காலத்துக்கு பிறகு டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. ஓப்பனர் இடத்தை கில்லுக்கு விட்டுக்கொடுக்க வேண்டிய சாம்சன், விக்கெட் கீப்பராக தனது இடத்தை தக்கவைத்துக்கொண்டார்.

சாம்சனுக்கு பதிலாக விக்கெட் கீப்பராக அணியில் இடம்பிடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஜிதேஷ் சர்மாவுக்கு அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை. பேட்டிங் வரிசையை வலுப்படுத்தும் விதமாக, ஸ்பெசலிஸ்ட் வேகப்பந்து வீச்சாளராக பும்ரா மட்டும் சேர்க்கப்பட்டு, பேட்டிங் ஆல்ரவுண்டர் ஷிவம் துபே அணியில் சேர்க்கப்பட்டார்.

துபாய் ஆடுகளத்தில் 175-180 ரன்களே வெற்றிக்கு போதுமானது எனக் கூறப்படும் நிலையில், டாஸ் வென்ற சூர்யகுமார் யாதவ் சரியான முடிவெடுத்தார்.

நெருக்கடி கொடுத்த பும்ரா SAJJAD HUSSAIN/AFP via Getty Images பும்ராவின் பந்து வீச்சு எதிரணிக்கு நெருக்கடியை ஏற்படுத்தியது

ஹார்திக் பாண்ட்யா வீசிய முதல் ஓவரில் யூஏஇ அணி, 10 ரன்கள் எடுத்து நேர்மறையாக இன்னிங்ஸை தொடங்கியது. முதல் ஓவரிலேயே இரு பவுண்டரிகளை விளாசிய ஷரஃபு, பும்ரா, அக்சர் படேல் வீசிய அடுத்தடுத்த ஓவர்களில் பவுண்டரி, சிக்சர் அடித்து அதகளப்படுத்தினார்.

17 பந்துகளில் 22 ரன்கள் எடுத்த ஷரஃபு, பும்ராவின் அற்புதமான யார்க்கரில் தனது ஆஃப் ஸ்டம்ப்பை பறிகொடுத்தார். 2024 உலகக் கோப்பைக்கு பிறகு டி20 கிரிக்கெட்டுக்கு திரும்பிய பும்ரா, சில பவுண்டரிகளை விட்டுக்கொடுத்தாலும் பிரமாதமாக பந்துவீசினார்.

யூஏஇ அணியின் டாப் ஆர்டருக்கு நெருக்கடி கொடுக்கும் விதமாக பவர்பிளே கட்டத்திலேயே பும்ராவை மூன்று ஓவர்களை சூர்யகுமார் யாதவ் வீசச் செய்தார்.

ஒரு விக்கெட் மட்டுமே பும்ரா எடுத்தாலும், அவர் ஒருமுனையில் கொடுத்த நெருக்கடியாலே பிற வீரர்கள் விக்கெட் எடுத்தனர். மூன்றாவது விக்கெட்டுக்கு களமிறங்கிய முகமது ஸோஹைப், வருண் சக்கரவர்த்தியின் முதல் ஓவரிலேயே, அவுட்சைட் ஆஃப் ஸ்டம்ப் லைனில் ஃபிலைட் செய்து வீசப்பட்ட பந்தை இன்சைட் அவுட் ஆட முயன்று, பாயிண்ட் திசையில் குல்தீப்பிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

பேட்டிங் வரிசையை நொறுக்கிய குல்தீப் SAJJAD HUSSAIN/AFP via Getty Images

அதுவரை பெரும்பாலும் எதிர்முனையிலேயே அமைதியாக நின்றுகொண்டிருந்த கேப்டன் முகமது வாசீம், பும்ரா வீசிய ஆட்டத்தின் ஆறாவது ஓவரில், மூன்று பவுண்டரிகள் அடித்து, இரட்டை இலக்கத்துக்கு நகர்ந்தார்.

47 ரன்களுக்கு 2 விக்கெட்களை இழந்து ஓரளவுக்கு நல்ல நிலையில் இருந்த யூஏஇ அணியின் பேட்டிங் முதுகெலும்பை குல்தீப் யாதவ் மொத்தமாக உடைத்துப்போட்டார். இன்னிங்ஸின் ஒன்பதாவது ஓவரில் ராகுல் சோப்ரா, முகமது வாசீம், ஹர்ஷிட் கௌசிக் என மூன்று விக்கெட்களை கைப்பற்றி, 50 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழக்கும் நிலைக்கு யூஏஇ அணியை தள்ளினார்.

முதலில் அவுட்சைட் ஆஃப் ஸ்டம்ப் லைனில் வீசிய பந்தில் பெரிய ஷாட் ஆட முயன்று, லாங் ஆன் திசையில் கில்லிடம் கேட்ச் கொடுத்து சோப்ரா ஆட்டமிழந்தார். அடுத்ததாக, ஸ்டம்ப் லைனில் வீசப்பட்ட பந்தில் ஸ்வீப் ஷாட் ஆடப் பார்த்து, கேப்டன் வாசீம் எல்பிடபிள்யூ ஆனார். ஓவரின் கடைசி பந்தில் கூக்ளி வீசி, ஹர்ஷிட் கௌசிக்கின் ஸ்டம்புகளை பதம்பார்த்தார்.

Getty Images குல்தீப் யாதவ்

கடைசி கட்டத்தில் அணியை கரைசேர்ப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஆசிஃப் கான், 2 ரன்கள் மட்டுமே எடுத்து பேட்டிங் ஆல்ரவுண்டர் துபேவின் மிதவேகப் பந்தில் சாம்சனிடம் கேட்ச் கொடுத்து நடையைக்கட்டினார்.

அடுத்தடுத்த ஓவர்களில் யூஏஇ அணியின் டெயிலெண்டர்கள் விளையாடிய விதம், அதுவொரு கத்துக்குட்டி அணி என்பதை நிரூபித்தது. எந்தவொரு திட்டமிடலும் இன்றி, மனம்போன போக்கில் பேட்டை சுழற்றி விக்கெட்டை கோட்டைவிட்டனர்.

இந்திய வம்சாவளி வீரரான சிம்ரன்ஜீட் சிங், 1 ரன்னில் அக்சர் பந்தில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். அடுத்த ஓவரில், பராசர், ஜுனைட் சித்திக் ஆகியோரின் விக்கெட்டை துபே கைப்பற்ற, கடைசி விக்கெட்டாக ஹைதர் அலியை ஆட்டமிழக்க செய்து இன்னிங்ஸை முடித்துவைத்தார்.

ஒருகட்டத்தில் 41 ரன்களுக்கு 2 விக்கெட்களை இழந்த யூஏஇ அணி, மோசமான பேட்டிங்கால் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தது. சொந்த மண்ணில் நடைபெற்ற ஆசிய கோப்பையின் முதல் ஆட்டத்தில், யூஏஇ அணி 13.1 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்து, 57 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இதன்மூலம், சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்திய அணிக்கு எதிராக குறைந்த ரன் எடுத்த அணி என்ற மோசமான சாதனையை யூஏஇ அணி படைத்தது.

Getty Images ஜஸ்ப்ரித் பும்ரா சூர்யகுமாரின் ஸ்போர்ட்ஸ்மேன்ஷிப் தருணம்

இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் தொடர்ச்சியாக வாய்ப்பு மறுக்கப்பட்ட சைனாமேன் சுழலர் குல்தீப் யாதவ், 4 விக்கெட்களை கைப்பற்றி, தனது திறமையை நிரூபித்தார்.

குல்தீப் மட்டுமின்றி, அக்சர், வருண் சக்கரவர்த்தி என அனைத்து சுழலர்களும் விக்கெட் கைப்பற்றி அசத்தினர். பும்ரா, ஹார்திக் பாண்ட்யாவுடன் மூன்றாவது வேகப்பந்து வீச்சாளராக களமிறங்கிய துபே, மூன்று விக்கெட்களை கைப்பற்றினார்.

துபே வீசிய இரண்டாவது ஓவரில், கிரீஸுக்கு வெளியே சென்ற ஜுனைட் சித்திக்கை சாம்சன் ரன் அவுட் செய்தார். ஆனால், பந்துவீச ஓடி வருகையில், துபேவின் துண்டு (rag) கீழே விழுந்தால், கவனம் தொலைத்ததாக ஜுனைட் சித்திக் முறையிடவே, அப்பீலை வாபஸ் பெற்றார் சூர்யகுமார் யாதவ்.

Getty Images வருண் சக்ரவர்த்தி

58 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிமையான இலக்குடன் களமிறங்கிய ஓப்பனர்கள் அபிஷேக் சர்மாவும் கில்லும் தொடக்கம் முதலே பேயாட்டம் ஆடினர்.

ஹைதர் அலி வீசிய இன்னிங்ஸின் முதல் பந்திலேயே சிக்ஸர் விளாசிய அபிஷேக் சர்மா, சிக்ஸர்களும் பவுண்டரிகளுமாக பறக்கவிட்டு, புயல் வேகத்தில் இலக்கை விரட்டினார். நீண்ட நாட்களுக்கு பிறகு இந்திய டி20 அணிக்கு மறுவருகை நிகழ்த்திய கில்லும் தன் பங்குக்கு, அதிரடியை வெளிப்படுத்தினார்.

ஜுனைட் சித்திக் பந்தில் பிரமாண்டமான சிக்ஸர் விளாசிய அபிஷேக் சர்மா, அடுத்த பந்திலும் பெரிய ஷாட்டுக்கு முயன்று 30 ரன்களில் ஆட்டமிழந்தார். அறுவை சிகிச்சைக்கு பிறகு சர்வதேச கிரிக்கெட்டுக்கு திரும்பிய கேப்டன் சூர்யகுமார் யாதவ், சந்தித்த முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.

நெட் ரன் ரேட்டை (NRR) அதிகப்படுத்தும் நோக்கத்துடன் விளையாடிய இந்திய அணி, 4.3 ஓவரில், வெற்றிக்கான ரன்களை எட்டியது. இதன்மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்திய அணியின் அதிவேகமான சேஸாக, இந்த ஆட்டம் மாறியது.

சமீபத்தில் நடைபெற்ற முத்தரப்பு தொடரில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு எதிராக நம்பிக்கையளிக்கும் விதமாக விளையாடிய யூஏஇ அணி, மோசமான முறையில் ஆசிய கோப்பை தொடரை தொடங்கியுள்ளது.

7 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்கள் கைப்பற்றிய குல்தீப் யாதவ், ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த வெற்றியின் மூலம், குரூப் ஏ பிரிவில் புள்ளிகள் பட்டியலில் இந்திய அணி, 2 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.

இந்திய அணி தனது அடுத்த ஆட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை(செப். 14) பாகிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது. ஆசிய கோப்பையில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் ஆட்டமான அதில், பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா ஆதிக்கத்தை பறைசாற்றுமா என்பதே இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் ஆவலாக உள்ளது.

'ஆப்ரேஷன் சிந்தூர்' நடவடிக்கைக்கு பிறகு, இரு அணிகளும் முதல்முதலில் மோதும் கிரிக்கெட் ஆட்டம் என்பதால், உலகம் முழுக்க இந்த ஆட்டத்துக்கு எதிர்பார்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.