ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இரண்டாவது லீக் ஆட்டத்தில் இன்று இந்தியா – ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகள் மோதின.
டாஸ் வென்ற இந்திய கேப்டன் சூரியகுமார் யாதவ் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். துபாய் மைதானத்தின் சுழற் தன்மை காரணமாக குல்தீப் யாதவ், வருண் சக்கரவர்த்தி, அக்சர் பட்டேல் ஆகியோர் ஸ்பின் கூட்டணியாக இடம்பெற்றனர். பும்ரா மட்டும் பிரதான வேகப்பந்துவீச்சாளராக களமிறங்கினார்.
முதலில் பேட்டிங் செய்த ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணி ஆரம்பத்திலேயே தடுமாறியது. சராப்பு 22 ரன்களிலும், முகமது வசி 19 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். தொடர்ந்து வந்த வீரர்கள் சீரான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல், 13.1 ஓவர்களில் 57 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனார்கள். எட்டு வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய பந்துவீச்சாளர்களில் குல்தீப் யாதவ் 4 விக்கெட், சிவம் துபே 3 விக்கெட் கைப்பற்றினர்.
58 ரன்கள் என்ற இலக்கை துரத்திய இந்திய அணியில் அபிஷேக் ஷர்மா முதல் பந்திலே சிக்ஸருடன் தொடங்கினார். 4.3 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 60 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதிகபட்சமாக அபிஷேக் ஷர்மா 30 ரன்கள் எடுத்தார்.
இந்திய அணி தனது அடுத்த ஆட்டத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை பரம எதிரியான பாகிஸ்தானை எதிர்கொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது.