எடப்பாடி பழனிச்சாமி பேருந்து பயணத்தை முடித்துவிட்டு திரும்பும் போது, கட்சி முழுமையாக காலியாகி விடும் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகரில் நடைபெற்ற திமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில், திமுக இளைஞரணித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று பேசினார். நிகழ்ச்சியில் பேசிய உதயநிதி ஸ்டாலின், “எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி, பாஸ் எடுத்துக்கொண்டு பேருந்தில் கிளம்பிவிட்டார். பழனிசாமி கூட்டங்களில் 108 ஆம்புலன்ஸ் வாகனம் மற்றும் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களை தாக்குகின்றனர். மு.க.ஸ்டாலின் இவ்வாறு நடந்தால், ஆம்புலன்ஸ் அனுப்பி வைத்த பின்னரே பேச்சைத் தொடங்குவார். எடப்பாடி போல ஒரு தலைவர் இருக்கலாமா? விரைவில் பாஜகவின் அறுவை சிகிச்சையால் அதிமுக ஐசியுவில் அனுமதிக்கப்படும். கடைசியில் உங்களை காப்பாற்றுவதற்கும் எங்கள் தலைவர் தான் வருவார்.
திமுகவில் ஒரு பிரச்சனை என்றால் நிர்வாகிகள் அறிவாலயத்திற்கு வருவார்கள், ஆனால் அதிமுகவில் பிரச்சனை என்றால் செங்கோட்டையன் போன்றவர்கள் 'ஹரித்துவார்' செல்வதாக கூறி பாஜக தலைவர்களை சந்தித்துவிட்டு வருகிறார்கள். அதிமுக தொண்டர்கள் தற்போது ஒரே குடையின் கீழ், பாஜகவின் அணியாக மாறிவிட்டதாக எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். "தமிழகத்தை காப்போம், தமிழகத்தை மீட்போம்" என்று பிரச்சாரம் செய்யும் பழனிசாமி முதலில் பாஜகவிடமிருந்து அதிமுகவை மீட்டெடுக்க வேண்டும். எடப்பாடி பழனிச்சாமி முதல் ரவுண்டில் பாதி கட்சி காணாமல் போய்விட்டது. இரண்டாவது ரவுண்டில், பஸ்ஸில் அவர் மட்டும் தனியாக வருவார் என நினைக்கிறேன். டிரைவர் கூட வருவாரா என்ன தெரியவில்லை” என விமர்சித்தார்.