Vikatan Digital Awards 2025: "சிம்பு, வெற்றிமாறனின் எந்தப் படத்தைப் பார்த்தாலும்..." - டி.ராஜேந்தர்
Vikatan September 14, 2025 02:48 PM

டிஜிட்டல் தளத்தில் தொடர்ந்து தூள் கிளப்பிக் கொண்டிருக்கும் கலைஞர்களை அங்கீகரிக்கும் வகையில், `விகடன் டிஜிட்டல் விருதுகள்' விழாவை முதல் முறையாக நடத்துகிறது விகடன்.

`Best Solo Creator - Male', `Best Solo Creator - Female', `Best Couple Creator' என மொத்தமாக 27 பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படவுள்ளன. இந்நிகழ்ச்சி சென்னை கலைவாணர் அரங்கில் இன்று (செப்டம்பர் 13) மாலை 4 மணியளவில் தொடங்கியது.

வெற்றிமாறன் - டி. ராஜேந்தர்

இதில், நடந்தால் செய்தி, பேசினால் செய்தி, பேசாவிட்டாலும் செய்தி என எங்கும் சென்டர் ஆஃப் அட்ராக்ஷனாக இருக்கும் பிறவிக் கலைஞன் சிலம்பரசன் டி.ஆருக்கு Most Celebrated Hero in Digital விருது வழங்கப்பட்டது.

இயக்குநர் வெற்றிமாறன் இவ்விருதினை வழங்க டி.ராஜேந்தர் பெற்றுக்கொண்டார்.

அதையடுத்து மேடையில் பேசிய டி. ராஜேந்தர், ``இந்த விருதை நீங்கள்தான் வாங்க வேண்டும் என்று என்னை வற்புறுத்தி அனுப்பிய என் மகனுக்குத்தான் இந்த எல்லாப் புகழும்.

விகடன் டிஜிட்டல் டீமுக்கு நன்றி. விகடன் வாசகன் நான். என் வீட்டில் விகடன் வாங்க முடியாத அளவுக்கு ஏழ்மை. ஆனால், எந்த வீட்ல விகடன் இருக்கோ, அங்க போய் வரிக்கு வரி படிப்பேன்.

ஒரு காலகட்டத்தில் விகடனோடு எனக்கு உடன்பாடு. சில காலகட்டத்தில் வந்திருக்கலாம் முரண்பாடு. அவர்கள் மூலம் வந்திருக்கலாம் இடர்பாடு. ஆனால், விருது வாங்க அழைத்திருக்கிறார்கள் அன்போடு. அதற்கேற்ப வந்திருக்கிறேன்... தமிழ்ப் பண்பாடு.

வெற்றிமாறன் - டி. ராஜேந்தர்

என் பையன் வந்து வாங்கவில்லையே என்பதில் எனக்கு சிறு வருத்தம். ஆனால், வெற்றிமாறன் கரத்தால் வாங்குவது நல்ல பொருத்தம்.

வெற்றிமாறன் தொட்டது என்னவாகும்... அது பொன்னாகும். ஒரு சாதனை நாயகனோடு சிலம்பரசன் அமைத்திருக்கிறார் ஒரு கூட்டணி.

எத்தனையோ நாள்களாக அவருக்கும் சிலம்பரசனுக்கும் நட்பு இருந்தது. வெற்றிமாறனின் எந்தப் படத்தைப் பார்த்தாலும் சிலாகித்துப் பேசுவார்.

என்னுடைய ஷூட்டிகை நிறுத்திவிட்டு இங்கு வந்ததற்குக் காரணம், அழையாத வாசலை நான் மிதிப்பதில்லை. அழையாதவர்களை நான் மதிப்பதுமில்லை.

என்னை மதித்து அழைத்தார்கள். மதித்து வந்தேன், விஜயம் தந்தேன். வெற்றிமாறன் கரங்களால் விருதைப் பெற்றேன், ஆனந்தமுற்றேன்" என்று கூறினார்.

Vikatan Digital Awards: " 'அமைதிப்படை' ஓ.பி.எஸ், 'தில்லாலங்கடி' உதயநிதி" - ஜெயக்குமார் கலகல
© Copyright @2025 LIDEA. All Rights Reserved.