17வது ஆசிய கோப்பை T20 கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் மற்றும் அபுதாபியில் நடைபெற்று வருகிறது. இன்று அபுதாபியில் நடைபெற்ற 5வது லீக் ஆட்டத்தில் ‘பி’ பிரிவில் வங்காளதேசம் – இலங்கை அணிகள் மோதின.
டாஸ் வென்ற இலங்கை கேப்டன் அசலன்கா பந்துவீச்சைத் தேர்வு செய்தார். அதன்படி வங்காளதேசம் பேட்டிங் தொடங்கியது. தொடக்க வீரர்கள் டான்சித் ஹசன் தமீம் மற்றும் பர்வேஸ் ஹொசைன் எமோன் இருவரும் ரன் எடுக்காமல் வெளியேறினர். பின்னர் டோஹித் ஹிரிடோய் (8) ரன் அவுட்டாக, மஹேதி ஹசன் 9 ரன்னில் விக்கெட் இழந்தார். கேப்டன் லிட்டன் தாஸ் 28 ரன்னில் ஆட்டமிழந்ததால், வங்காளதேசம் 53 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து சிக்கலில் சிக்கியது.
இந்த நிலையில் ஷமிம் ஹொசைன் மற்றும் ஜாக்கர் அலி இணைந்து பொறுப்புடன் விளையாடினர். இருவரும் ஆட்டமிழக்காமல் களம் பிடித்தனர். ஷமிம் ஹொசைன் 42 ரன்கள், ஜாக்கர் அலி 41 ரன்கள் எடுத்து அணியை தாங்கினர்.
இதன் மூலம் வங்காளதேச அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 139 ரன்கள் எடுத்தது. இலங்கை அணிக்காக ஹசரங்கா 2 விக்கெட்டுகளை பெற்றார்.