தேனி மாவட்டம் கம்பத்தில் ஓய்வுபெற்ற ஒரு போலீஸ் அதிகாரி இயற்கை முறையில் விவசாயம் செய்து வரும் நிலையில், அவரது தோட்டத்தில் 6 அடி நீளமுள்ள முருங்கைக்காய் காய்த்துள்ளது அப்பகுதியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
கம்பம் அருகே உள்ள சுருளிப்பட்டி சாலை பகுதியைச் சேர்ந்தவர் கண்ணதாசன். இவர், தமிழக போலீஸ் துறையில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். ஓய்வுக்குப் பிறகு விவசாயத்தில் தீவிரம் காட்டி, தனது வீட்டைச் சுற்றியுள்ள தோட்டத்தில் ரசாயனமின்றி இயற்கை முறையில் காய்கறிகள் மற்றும் மரங்களை வளர்த்து வருகிறார்.
இதற்கிடையில், சில மாதங்களுக்கு முன்பு அவரது நண்பர் ஒருவர், புட்டு முருங்கை வகையைச் சேர்ந்த நான்கு குச்சிகளை வழங்கினார். அவற்றில் ஒன்றை தோட்டத்தில் நட்டு வளர்த்த கண்ணதாசன், அதை சீராக பராமரித்து வந்தார்.
சமீபத்தில் அந்த மரத்தில் முருங்கைக்காய் காய்க்க தொடங்கியது. தொடக்கத்தில் சாதாரணமாக இருந்த காய்கள், நாளடைவில் வெகுவாக நீளமாக வளரத் தொடங்கின. அதனைப் பறிக்காமல் கவனித்த கண்ணதாசன், சில நாட்களில் அந்த முருங்கைக்காய்கள் ஒவ்வொன்றும் சுமார் 5 முதல் 6 அடி நீளத்திற்கு நீண்டதாக காட்சியளித்ததைக் காண நேர்ந்தது.
தற்போது அந்த மரத்தில் பல நீளமான முருங்கைக்காய்கள் தொங்கிக் காணப்படுகின்றன. இயற்கை முறையில் பூச்சிக்கொல்லி மருந்துகள் இல்லாமல் சாகுபடி செய்யப்பட்ட இந்த புட்டு முருங்கை மரம், பலரது பார்வையை ஈர்த்துக் கொண்டிருக்கிறது. மேலும் இதனை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்லும் நிலையில் அது நல்ல விலையிலும் விற்பனையாகிறது.