தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தனது அரசியல் பயணத்தின் முதல் பிரசாரத்தைத் தொடங்கிய நிலையில், திருச்சி ரசிகர்கள் மற்றும் தொண்டர்களின் பெரும் வரவேற்பால் நகரம் முழுவதும் உற்சாகம் நிலவியது. கட்டுக்கடங்காத கூட்டம் காரணமாக, விஜய் தனது திட்டமிட்ட நேரத்தில் பிரசார தளத்திற்கு செல்ல முடியாமல் தாமதமானார்.
இதன் தொடர்ச்சியாக, பெரம்பலூரிலும் விஜயை காண மக்கள், தொண்டர்கள் மதியம் முதல் நள்ளிரவு வரை ஆர்வத்துடன் காத்திருந்தனர். ஆனால், இரவு 1 மணியை கடந்ததால், மக்களின் சிரமத்தைக் கருத்தில் கொண்டு அங்கு நடைபெற இருந்த மக்கள் சந்திப்பு ரத்து செய்யப்பட்டது.
இதுகுறித்து த.வெ.க சார்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பில், பெரம்பலூர் மக்கள் சந்திப்பு விரைவில் புதிய தேதியில் நடத்தப்படும் என்றும், அதற்கான விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விஜயின் அரசியல் வருகையால் மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உருவாகியிருப்பதையும், அவரது முதல் பிரசாரங்கள் எங்கு நடந்தாலும் பெரும் திரளான ஆதரவாளர்கள் கூடுகின்றனர் என்பதையும் இந்த நிகழ்வுகள் வெளிப்படுத்துகின்றன.
இந்நிலையில், பெரம்பலூரில் தவெக தலைவர் விஜய் கலந்து கொள்ள இருந்த மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நள்ளிரவில் ரத்து செய்யப்பட்டதை கண்டித்து, பெரம்பலூரின் பல இடங்களில் விஜயை கண்டித்து போஸ்டர் ஒட்டியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.