நிச்சயமாக உங்களைச் சந்திக்க, மீண்டும் வருவேன்.. பெரம்பலூர் மக்களுக்கு விஜய் கொடுத்த உறுதிமொழி..!
Webdunia Tamil September 15, 2025 05:48 AM

நேற்று நேரம் காரணமாக பெரம்பலூருக்கு விஜய் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்ட நிலையில் நிச்சயமாக உங்களைச் சந்திக்க, மீண்டும் வருவேன் என பெரம்பலூர் மக்களுக்கு விஜய் உறுதிமொழி கொடுத்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியதாவது:

“வாகை சூடும் வரலாறு திரும்புகிறது; உங்க விஜய் நான் வரேன்” எனும் நமது மக்கள் சந்திப்புப் பயணம், தித்திப்புடன் திருச்சியில் நேற்று தொடங்கியது. தொடர்ந்து நம் மக்கள் சந்திப்பானது அரியலூர், குன்னம் வரை நீண்டது. அனைத்து இடங்களிலும் மக்களின் தன்னெழுச்சியான பேரன்பும் பேராதரவும் மனம் நெகிழச் செய்தது. உங்கள் அனைவருக்கும் கோடானு கோடி நன்றி.

இத்துணை உணர்வு மிக்க மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகள் சார்ந்த பல்வேறு பணிகளை மேற்கொண்ட நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களான மாவட்டப் பொறுப்பாளர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியினை உரித்தாக்குகின்றேன்.

வழிநெடுக மிக நீண்ட தூரம் கூடியிருந்த மக்கள் திரளைக் கடந்து செல்லவே இயலாத நிலையால், நேற்று நள்ளிரவு கடந்தும் பெரம்பலூரில் நம்மைச் சந்திக்கக் கூடி இருந்த பல்லாயிரக்கணக்கான நம் உறவுகளைக் காண இயலாத ஒரு சூழல் ஏற்பட்டது. எனவே அனைவரது நலன் கருதி, மிகுந்த மன வருத்தத்துடன், மீண்டும் இன்னொரு நாள் பெரம்பலூர் வருவதென முடிவெடுக்க வேண்டிய நிலை உண்டானது. பேரன்பு கொண்டு காத்திருந்த பெரம்பலூர் மக்களிடம் என்னுடைய வருத்தத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். நிச்சயமாக உங்களைச் சந்திக்க, மீண்டும் வருவேன்.

Edited by Siva

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.