“இந்திய நாட்டின் மொழிகள் மற்றும் பேச்சு வழக்குகளுக்கு இடையே ஒரு பாலமாக இந்தி செயல்படுகிறது என அமித்ஷா தெரிவித்துள்ளார்.
இந்திய அரசியல் நிர்ணய சபை, தேவநாகரி எழுத்து வடிவத்தில் எழுதப்படும் இந்தி மொழியை இந்தியாவின் ஆட்சி மொழியாக, கடந்த 1949-ஆம் ஆண்டு செப்டம்பர் 14-ஆம் நாள் தேர்வு செய்தது. அந்த நாளே 'இந்தி திவாஸ்' என்ற பெயரில் இந்திய அரசு, இந்தி மொழி பேசுவோர் உள்ளிட்டவர்களால் கொண்டாடப்படுகிறது.
2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவில் உள்ள 43.62% பேரின் தாய்மொழியாக இந்தி உள்ளது. 2001இல் நடத்தப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பின்போது இது 41.03% ஆக இருந்தது.
நாட்டிலேயே உத்தர பிரதேசத்தில்தான் இந்தி பேசும் மக்கள் அதிகமாக உள்ளனர். அதற்கு அடுத்த இடங்களில் பிகார், ராஜஸ்தான், ஹரியானா ஆகிய மாநிலங்கள் உள்ளன.மொரீசியஸ், சூரினாம், கயானா, ஃபிஜி, டிரினிடாட் & டொபாக்கோ, நேபாளம் ஆகிய நாடுகளிலும் இந்தியை தாய்மொழியாகக் கொண்டவர்கள் கணிசமாக உள்ளனர்.
இந்தநிலையில் நாடு முழுவதும் இன்று ‘இந்தி மொழி நாள்’(இந்தி திவாஸ்) கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், நாட்டு மக்களுக்கு மத்திய மந்திரி அமித்ஷா ‘இந்தி மொழி நாள்’ வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ‘எக்ஸ்’ தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;-
“இந்திய நாட்டின் மொழிகள் மற்றும் பேச்சு வழக்குகளுக்கு இடையே ஒரு பாலமாக இந்தி செயல்படுகிறது. தேசிய ஒற்றுமையை மேம்படுத்துவதோடு, தொழில்நுட்பம், அறிவியல் மற்றும் ஆராய்ச்சியின் மொழியாகவும் இந்தி மாறி வருகிறது. சுதந்திரப் போராட்டம் முதல் எமர்ஜென்சி நாட்கள் வரை, நாட்டின் குடிமக்களை ஒன்றிணைப்பதில் இந்தி முக்கிய பங்கு வகித்துள்ளது. அனைத்து மொழிகளையும் இணைத்து, வளர்ந்த, மொழியியல் ரீதியாக தன்னிறைவு பெற்ற இந்தியாவை உருவாக்குவதில் இந்தி தொடர்ந்து முக்கிய பங்கு வகிக்கும்.”இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.