தேசிய முற்போக்கு திராவிட கழகம் தொடங்கி 20 ஆண்டுகள் நிறைவடைந்து 21-ம் ஆண்டிற்குள் அடியெடுத்து வைக்கிறது. இதனை முன்னிட்டு, தேமுதிக தொண்டர்களுக்கு அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது:
நல்ல நோக்கத்திற்காகத் தொடங்கப்பட்ட கட்சி நமது தேசிய முற்போக்கு திராவிட கழகம். நமது கட்சி 2006-ம் ஆண்டு மதுரை மாநகரில் நமது அன்பு தலைவர் புரட்சிக் கலைஞர் கேப்டன் அவர்களால் தொடங்கப்பட்ட தேசிய முற்போக்கு திராவிட கழகம் தொடங்கி 20 ஆண்டுகள் முடிவடைந்து நாளை (14.09.2025) 21-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.
பல்வேறு வெற்றிகள், தோல்விகள், சவால்கள், துரோகங்கள், எல்லாவற்றையும் எதிர்நீச்சல் போட்டு நமது பாதையில் எத்தனையோ கற்களும், முற்களும் இருந்தாலும் எல்லாவற்றையும் கடந்து 21-ம் ஆண்டில் நாம் வெற்றியோடு அடியெடுத்து வைக்கிறோம். ஜாதி, மதம் ஆகியவற்றிற்கு அப்பாற்பட்ட கட்சியாக ஒரே குலம், ஒரே இனம் என்ற கோட்பாட்டோடு சனாதானம், சமதர்மம், சமத்துவத்தைக் கடைப்பிடிக்கும் கட்சியாக தேசிய முற்போக்கு திராவிட கழகம் என்றும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதே பாணியில்தான் எப்போதும் செயல்படும்.
நம் தலைவர் இல்லாமல் நாம் சந்திக்கப் போகும் முதல் தேர்தல், 2026 சட்டமன்றத் தேர்தல் நமக்கெல்லாம் ஒரு மிகப்பெரிய சவாலான தேர்தல். உள்ளம் தேடி இல்லம் நாடி மற்றும் மக்களைத் தேடி மக்கள் தலைவர் கேப்டன் ரத யாத்திரை மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வருகிறது. வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலிலும் நாம் மகத்தான வெற்றி பெற அனைவரும் ஒன்றாக உழைப்போம், வெற்றிக் கனிகளைப் பறிப்போம்.
ஜனவரி 9 கடலூரில் நடைபெற உள்ள மக்கள் உரிமை மீட்பு மாநாடு 2.0 மாநாட்டில் அனைவரும் தவறாமல் கலந்துகொண்டு நமது கழகத்தின் சார்பாக நடத்தப்படும் மாநாட்டை மாபெரும் வெற்றி மாநாடாக நிரூபிக்க வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை. தேமுதிக இன்று தமிழ்நாட்டில் அசைக்க முடியாத சக்தி என்றும், தமிழ்நாட்டில் யாரும் தவிர்க்க முடியாத மாபெரும் இயக்கம் என்றும், நம் உழைப்பால் மேலும் உணர்த்துவோம்.
ஏழை, எளிய மக்களுக்கு தங்களால் இயன்ற உதவிகளைச் செய்து, நம்முடைய கழகத் துவக்க நாளை மிகச் சிறப்பாக அனைவரும் கொடியேற்றி, இனிப்புகள் வழங்கி, பள்ளி மாணவர்களுக்கு உதவிகளை வழங்கி, நம்மால் முடிந்த உதவிகளைச் செய்து, இந்த நாளில் இயன்றதை செய்வோம் இல்லாதவர்க்கே, தமிழன் என்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா' என்ற தலைவரின் தாரக மந்திரப்படி எட்டுத்திக்கும் நமது முரசு வெற்றி முரசாகக் கொட்ட அனைவரும் ஒன்றாக இணைந்து உழைப்போம், வெற்றி பெறுவோம் என அனைவரும் சூளுரை ஏற்போம், வெற்றி காண்போம் இந்த நன்னாளில் அனைவருக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். என்று அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.