வங்காள எழுத்தாளரும், பன்மொழி அறிஞருமான திரு.சையது முஜ்தபா அலி அவர்கள் பிறந்ததினம்!.
வங்காள எழுத்தாளரும், பன்மொழி அறிஞருமான சையது முஜ்தபா அலி 1904ஆம் ஆண்டு செப்டம்பர் 13ஆம் தேதி வங்காள மாகாணத்தின் கரீம்கஞ்ச் நகரில் (தற்போது அசாமில் உள்ளது) பிறந்தார்.
வங்காள மொழியை தாய்மொழியாக கொண்ட இவர் பிரெஞ்ச், அரபி, பாரசீகம், உருது, இந்தி, சமஸ்கிருதம், மராத்தி, குஜராத்தி, ஆங்கிலம் உட்பட 15 மொழிகளில் நிபுணராக திகழ்ந்தார்.
சொந்த வாழ்க்கை அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு வங்காள மொழியில் பல கதைகளை எழுதினார். இவரது தனித்துவமான பாணியால் இக்கதைகள் மிகவும் பிரபலமடைந்தன. 'தேஷெ பிதேஷெ', 'ரம்ய ரசனா', 'பஞ்சதந்த்ரா' ஆகியவை இவரது சிறந்த படைப்புகளாகும்.
இவர் ஆனந்த புரஸ்கார் போன்ற பல விருதுகளைப் பெற்றுள்ளார். கால, தேச, மத, மொழி எல்லைகளுக்கு அப்பாற்பட்ட படைப்பாளியான சையத் முஜ்தபா அலி 1974ஆம் ஆண்டு மறைந்தார்.
கர்நாடக இசைக் கலைஞர் திரு.முடிகொண்டான் வெங்கடராமர் அவர்கள் நினைவு தினம்!.
முடிகொண்டான் வெங்கடராமர் (Mudicondan C. Venkataramar, அக்டோபர் 15, 1897 - செப்டம்பர் 13, 1975) தமிழகத்தைச் சேர்ந்த ஒரு கர்நாடக இசைக் கலைஞர் ஆவார். இவரை முடிகொண்டான் என்றே எல்லோரும் அழைத்தார்கள்.
முடிகொண்டான் வெங்கடராமர்திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தாலூக்காவில் திருவாரூரிலிருந்து மயிலாடுதுறை செல்லும் வழியில் உள்ள முடிகொண்டான் கிராமத்தில் சக்கரபாணி காமாட்சி தம்பதிக்கு மகனாக பிறந்தார். இவரது குடும்பத்தில் எல்லோருக்குமே இசையில் ஈடுபாடு இருந்தது. சக்கரபாணி இராக ஆலாபனை செய்வதிலும், தேவாரங்கள் பாடுவதிலும் சிறந்து விளங்கினார். தாய் வழி பாட்டனாரான ஸ்ரீவாஞ்சியம் சுவாமிநாதர் பதங்களையும் ஜாவளிகளையும் தாள லயத்துடன் பாடுவார். அதனால் அவர் தளுக்கு சுவாமிநாதர் என குறிப்பிடப்பட்டார். இவரது மாமா பொம்மலாட்டம் மணி எனப் பிரபலமானவர்.