திரை இசை உலகில் 50 ஆண்டுகளை நிறைவு செய்த இசைஞானி இளையராஜாவை கௌரவிக்கும் வகையில், தமிழக அரசு சார்பில் ‘சிம்பொனி – சிகரம் தொட்ட தமிழன் இசைஞானி இளையராஜா – பொன்விழா ஆண்டு 50’ என்ற தலைப்பில் பாராட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.
பிரமாண்டமாக நடந்த இந்த நிகழ்ச்சியில் அரசியல், திரையுலக, கலையுலக பிரபலங்கள் பங்கேற்று சிறப்பித்தனர். விழாவில் கலந்து கொண்ட பொதுமக்கள் பெரும் உற்சாகத்துடன் இசைஞானியின் சாதனைகளை கொண்டாடினர்.
விழா முடிந்ததையடுத்து, இளையராஜா தனது நன்றியை பதிவு செய்ய வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் அவர், “தமிழக அரசு நடத்திய பாராட்டு விழா எனக்கு அளவிலாச மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அதிக மகிழ்ச்சியால் அங்கு நான் பேச முடியவில்லை. இவ்விழாவை நடத்தித் தந்த தமிழக அரசுக்கும், மாண்புமிகு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி.
அதேபோல், நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலகநாயகன் கமல்ஹாசன் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் என் இதயம் கனிந்த நன்றி,” என்று தெரிவித்துள்ளார்.