பேரறிஞர் அண்ணா என அழைக்கப்படும், சிஎன் அண்னாத்துரை, காஞ்சிபுரத்தில் நடராஜர் - பங்காரு அம்மாள் தம்பதியினருக்கு 15.9.1909 அன்று அண்ணா மகனாகப் பிறந்தார். எளிய குடும்பத்தில் பிறந்து சிறந்த மாணவராகவும், எழுத்தாளராகவும், ஆற்றல் மிக்க பேச்சாளராகவும், பண்பட்ட அரசியல் வாதியாகவும், உத்தமத் தலைவராகவும் திகழ்ந்தார்.
தமது சிறந்த பேச்சாற்றல் மூலம் மக்களிடையே அறிவுப் புரட்சியை ஏற்படுத்தினார். "கடமை, கண்ணியம், கட்டுப்பாடு" என்கின்ற கோட்பாட்டை மக்களிடையே விதைத்தார். மாற்றாரையும் மதிக்கக் கற்றுத்தந்த மாபெரும் தலைவர் ஆவார்.
ஏழையின் சிரிப்பில், இறைவனைக் காண்போம்" என்ற கோட்பாட்டின் அடிப்படையில் தமிழ்நாட்டு மக்களின் முன்னேற்றத்திற்காக அரும்பாடுபட்டார். சொல்லாலும், செயலாலும், எழுத்தாலும் அண்ணா மறைந்தும், மறையாமல் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15 ஆம் நாள் ஆண்டுதோறும் தமிழ்நாடு அரசின் சார்பில் அரசு விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த ஆண்டு கொண்டாடப்படும் அண்ணாவின் 117-வது பிறந்த நாள் நிகழ்ச்சியில், முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள், மேயர், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், துணை மேயர், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொள்கின்றனர்.
இந்நிலையில், அண்ணாவின் பிறந்தநாளையொட்டி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின்," தமிழன்னை தந்திட்ட தலைமகன்! திராவிட முன்னேற்றக் கழகம் எனும் நம் உயிரைத் தாயென அளித்திட்ட திருமகன், பேரறிஞர் அண்ணா. தலைமகன் நிமிர்த்திய தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டோம்!" என கூறியுள்ளார்.
எதிர்க் கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியின் எக்ஸ் பதிவில்," தமிழ்நாடு, தமிழ், திராவிடம் என்றால் அண்ணா! அண்ணா என்றால் தமிழ்நாடு, தமிழ், திராவிடம்! இந்தியாவில் ஒரு மாநிலக் கட்சி ஆட்சி அமைக்க முடியுமா? நாட்டுக்குள் ஒரு தமிழ்-நாடா? என்று சந்தேக கேள்விகள் கேட்ட காலத்தில் தன் செயலால், சாதனையால் பதில் சொன்ன தென்னாட்டுத் தென்றல், நம் அண்ணா! அண்ணாவைப் பெயரில் மட்டும் அல்ல- கொள்கையில், செயலில், அரசியல் அறத்தில் 53 ஆண்டுகளாக பெருமையோடு ஏந்தி நிற்கிறது அதிமுக, குடும்பப் பின்புலமற்ற நம்மைப் போன்ற சாமானியர்களை அரியணை ஏற்றும் திராவிட அரசியலின் ஈடு இணையற்ற தலைமகனான பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் பிறந்தநாளான இன்று, குடும்ப ஆட்சியின் பிடியில் சிக்கியுள்ள தமிழகத்தை மீட்டு, சாமானிய மக்களுக்கான #அண்ணாயிசம் போற்றும் ஆட்சியை #அஇஅதிமுக தலைமையில் நிறுவிட உறுதியேற்போம். மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்." என கூறியுள்ளார்.