ஆசியக் கோப்பை T20: இந்தியா-பாகிஸ்தான் இன்று பலப்பரீட்சை
Seithipunal Tamil September 15, 2025 04:48 PM

17-வது ஆசியக் கோப்பை T20 கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய், அபுதாபி மைதானங்களில் நடந்து வருகிறது. இதில் 8 அணிகள் இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ஓமான், அமீரகம், ‘பி’ பிரிவில் ஆப்கானிஸ்தான், இலங்கை, வங்காளதேசம், ஹாங்காங் ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன.இன்றைய (6-வது நாள்) லீக் ஆட்டத்தில் துபாயில் பரம எதிரிகளான இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

தொடக்க ஆட்டத்தில் அமீரகத்தை 9 விக்கெட்டுக்கு சுருட்டிய இந்தியா, 57 ரன்னைக் கேவலமாக 4.3 ஓவர்களில் துரத்தி வெற்றி பெற்று சாதனை படைத்தது. குல்தீப் யாதவ் (4 விக்கெட்), ஷிவம் துபே (3 விக்கெட்) பந்து வீச்சில் மிரட்டினர்.

அணியில் அபிஷேக் ஷர்மா, சுப்மன் கில், கேப்டன் சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, சஞ்சு சாம்சன் என வலுவான பேட்டிங் வரிசை. ஆல்-ரவுண்டர்களாக ஷிவம் துபே, ஹர்திக் பாண்ட்யா, அக்ஷர் பட்டேல். பந்து வீச்சில் பும்ரா, குல்தீப், வருண் சக்ரவர்த்தி என உறுதியான படை.

முதல் ஆட்டத்தில் ஓமனை 93 ரன்னில் புரட்டியெடுத்த பாகிஸ்தான், உற்சாகத்துடன் களம் இறங்குகிறது. கேப்டன் சல்மான் ஆஹா, பஹர் ஜமான், முகமது ஹாரிஸ் பேட்டிங்கில் வலுப்படுத்த, ஷகீன் அப்ரிடி, அப்ரார் அகமது பந்து வீச்சில் பளீச். ஆல்-ரவுண்டர்களாக முகமது நவாஸ், சைம் அயூப்.

கடந்த ஏப்ரலில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலும், இந்திய ராணுவத்தின் ஆபரேஷன் சிந்தூர் பதிலடியும் காரணமாக இருநாட்டு உறவில் விரிசல் ஏற்பட்டது. அதன் பிறகு இரு அணிகளும் மோதுவது இதுவே முதல்முறை. எனவே, இன்றைய மோதல் விளையாட்டைத் தாண்டிய உணர்வை கிளப்பியுள்ளது.

இதுவரை T20-இல் இரு அணிகள் 13 முறை மோதியுள்ளன. இதில் 10 முறை இந்தியா வென்றுள்ளது. கடைசியாக 2024 உலகக் கோப்பை லீக் ஆட்டத்தில் நியூயார்க் மைதானத்தில் இந்தியா வென்றது. கடந்த 16 வெள்ளை பந்து சர்வதேச ஆட்டங்களில் இந்தியா 13 வெற்றிகள் பெற்றுள்ளது.

இந்திய அணியின் உத்தேச 11: அபிஷேக் ஷர்மா, சுப்மன் கில், சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), திலக் வர்மா, சஞ்சு சாம்சன், ஷிவம் துபே, ஹர்திக் பாண்ட்யா, அக்ஷர் பட்டேல், குல்தீப் யாதவ், வருண் சக்ரவர்த்தி, ஜஸ்பிரித் பும்ரா.

பாகிஸ்தான் அணியின் உத்தேச 11: சகிப்சதா பர்ஹான், சைம் அயூப், முகமது ஹாரிஸ், பஹர் ஜமான், சல்மான் ஆஹா (கேப்டன்), ஹசன் நவாஸ், முகமது நவாஸ், பஹீம் அஷ்ரப், ஷகீன் ஷா அப்ரிடி, சுபியான் முகீம், அப்ரார் அகமது.

இரவு 8 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை சோனி ஸ்போர்ட்ஸ் 1, 4, 5 சேனல்கள் நேரலையில் ஒளிபரப்புகின்றன.அனல் பறக்கும் இந்த மோதலில் யார் மேலோங்கப் போகிறார்கள் என்பது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.

 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.