ஹிட்லரை மன்னிப்பு கேட்கச் செய்த, 'ஜெய்ஹிந்த்' என்கிற சுதந்திர முழக்கம் தந்த தமிழர் திரு.செண்பகராமன் பிள்ளை அவர்கள் பிறந்ததினம்!
செண்பகராமன் பிள்ளை (Chempakaraman Pillai, செப்டம்பர் 15, 1891 – மே 26, 1934) தமிழகத்தைச் சார்ந்த இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்ற போராளி் ஆவார். இங்கிலாந்து, ஜெர்மனி ஆகிய நாடுகளுக்குப் பயணம் செய்து ஆங்கிலேயர்களுக்கு எதிராக படை திரட்டி போர் புரிந்தார். இட்லர், கெயிசர் ஆகியோருடன் நெருங்கிய உறவு கொண்டவர். இந்தியாவிற்கு வெளியே இருந்து கொண்டே பிரித்தானியரை நாட்டிலிருந்து வெளியேற்றப் பாடுபட்டவர். இந்திய தேசியத் தொண்டர் படையை உருவாக்கியவர்.
இவர் மன்னர் உயர் நிலைப்பள்ளியில் ஆறாம் படிவம் (1960 க்கு முந்தைய பள்ளி இறுதி வகுப்பு) படித்துக் கொண்டிருந்த போது இந்தியாவில் விடுதலைக் கணல் எரியத்தொடங்கிய காலம். செண்பகராமனையும் விடுதலைத்தீ பற்றிக்கொண்டது. அச்சிறிய வயதிலேயே தம்முடன் பயின்ற மாணவர்களைச் சேர்த்துக் கொண்டு "ஸ்ரீ பாரத மாதா வாலிபர் சங்கம் " ஏற்படுத்தி 'வந்தே மாதரம்' என உரிமை முழக்கம் இட்டார். அதன் பின்னர் விடுதலைப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டு 'ஜேய் ஹிந்த்' என்ற முழக்கத்தை எழுப்பினார்.
ஒரு சமயம் செண்பகராமன் ஹிட்லருடன் உரையாடிக் கொண்டிருந்த போது "இந்தியர்கள் பிரித்தானியருக்கு அடிமையாக இருக்கவே தகுந்தவர்கள். இந்தியாவுக்கு விடுதலைக் கிடைத்தால், நாட்டைத் திறமையாக ஆளும் தகுதி இந்தியருக்கு இருக்கிறதா என்பது சந்தேகமே " என்று இந்தியரைத் தாழ்த்திக் கூறினார். ஹிட்லர் கூறியதைக் கேட்ட நாட்டுப் பற்று மிக்க செண்பக ராமன் கொதித்தெழுந்தார். ஹிட்லருக்கு எதிராகத் திறமையாக வாதாடி, எழுத்து மூலம் ஹிட்லரை மன்னிப்பு கேட்கச் செய்தார்.
தங்கள் தலைவரை வாதாடி வென்ற செண்பகராமனை, நாசியர் வெறுத்தனர். எனவே, அவர் கலந்து கொண்ட அரசாங்க விருந்து ஒன்றில் பரிமாறப்பட்ட உணவில் திட்டமிட்டபடி நஞ்சைக் கலந்தனர். அந்த நஞ்சு நாளடைவில் மெல்ல மெல்ல செண்பகராமனை நோயாளியாக்கி படுத்த படுக்கையில் வீழ்த்தியது. தீவிர சிகிச்சைக்குப் பின் சிறிது நாளில் நலம் பெற்ற செண்பகராமனை, நாசிகள் மீண்டும் தாக்கிப் படுகாயப் படுத்தினார்கள். அதுவே அவரை மரணப் படுக்கையில் வீழ்த்தக் காரணமாக அமைந்தது. 1934 ஆம் ஆண்டு மே மாதம் 26 ஆம் நாளன்று செண்பக ராமனின் உயிர் பிரிந்தது.