சுற்றுலாத்தலமாக விளங்கும் நீலகிரி மாவட்டத்தில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில், பிளாஸ்டிக் குடிநீா் பாட்டில் உள்பட 19 வகையான பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தடையை மீறி, நீலகிரிக்கு பிளாஸ்டிக் பொருள்கள் கொண்டுவரப்படுகிறதா? என்பது குறித்து அதிகாரிகள் மாவட்டம் முழுவதும் சோதனையில் ஈடுபட்டு நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில், கா்நாடக மாநிலம் சிக்மகளூர் நகராட்சி ஆணையாளர், நகராட்சி கவுன்சிலா்கள் மற்றும் சிக்மகளூர் சட்டப்பேரவை உறுப்பினா் கொண்ட குழு நீலகிரியில் திடக்கழிவு திட்டங்கள் குறித்து ஆய்வு செய்வதற்காக சமீபத்தில் ஊட்டிக்கு வருகைத் தந்தனர். அவா்கள் வந்த பேருந்தில் பிளாஸ்டிக் தண்ணீா் பாட்டில்கள் உள்ளதாக ஊட்டி நகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
அதன் படி அதிகாரிகள் அந்தப் பேருந்தில் ஆய்வு மேற்கொண்டனா். அதில் 1 லிட்டா் பிளாஸ்டிக் குடிநீா் பாட்டில்கள் 60 இருந்தது தெரியவந்தது. அதனை பறிமுதல் செய்த அதிகாரிகள், பாட்டில் ஒன்றுக்கு ரூ.100 வீதம் ரூ.6 ஆயிரம் அபராதம் விதித்தனர்.