மதுரையில் பயங்கரம்..! “கூலிப்படையை ஏவி தொழிலதிபர் துடிக்க துடிக்க வெட்டி படுகொலை”.. 7 பேர் கைது… விசாரணையில் திடுக்கிடும் தகவல்…!!!!
SeithiSolai Tamil September 17, 2025 06:48 AM

மதுரை மத்திய பகுதியில் உள்ள பார்க் டவுன் 2-வது தெருவை சேர்ந்த தொழிலதிபர் ராஜ்குமார் (வயது 50) கடந்த சில ஆண்டுகளாக முனிச்சாலை பகுதியில் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தை நடத்தி வந்தவர். இவர் சம்பவ நாளில், தனது வீட்டின் முன்பாக மோட்டார் சைக்கிளில் நின்றிருந்தபோது, மர்ம நபர்கள் அரிவாள்களுடன் தாக்கினர். இதில் பலத்த காயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தகவல் அறிந்த கூடல்புதூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, அவரது உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து, துணை கமிஷனர் இனிகோ திவ்யன் தலைமையில், உதவி கமிஷனர் பொன் ரகு மற்றும் இன்ஸ்பெக்டர் ராஜாமணி ஆகியோர் இணைந்து, 2 தனிப்படைகள் அமைத்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், கொலை செய்யப்பட்ட ராஜ்குமார் நடத்தி வந்த நிறுவனத்தில், அவருடன் பங்குதாரராக இருந்த சந்தைப்பேட்டை சேர்ந்த கல்லாணை (51) என்பவரே, இந்த கொலையில் சம்பந்த பட்டுள்ளதாக தகவல் கிடைத்தது. அவரது மகனை பங்குதாரராக இணைக்க ராஜ்குமார் மறுத்ததிலிருந்தும், லாபப் பகிர்வை மையமாகக் கொண்டு இடையேயான மனவருத்தமும், முன்விரோதமும் காரணமாகவே இந்த கொலை சம்பவம் நடந்தது என கூறப்படுகிறது.

இதற்கு முன்பாக, 8 மாதங்களுக்கு முன்னர் மோட்டார் சைக்கிளில் சென்ற ராஜ்குமாரை, வாகனம் ஒன்று மோதச் செய்து கொலை செய்ய முயற்சி மேற்கொள்ளப்பட்டதாகவும் விசாரணையில் தெரிந்துள்ளது. அந்தத் திட்டம் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, தற்போது கூலிப்படையைக் கொண்டு கொலை திட்டம் செயல்படுத்தப்பட்டது.

கல்லாணை வீட்டிற்கு பெயிண்ட் வேலைக்கு வந்த விக்னேஷ்வரன் (45), சிவலிங்கம் (43), லாரன்ஸ் (43), ரவிமாறன் (55), ஜெயராஜ் (42), முரளி (44) ஆகியோரிடம் பணம் கொடுத்து, அவர்களை கூலிப்படையாக மாற்றி, ராஜ்குமாரை கண்காணித்து வெட்டி கொலை செய்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

இதனையடுத்து, கல்லாணை உட்பட 7 பேரும் கைது செய்யப்பட்டு, வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

 

.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.