ஜப்பான் தலைநகர் டோக்கியோவை தளமாகக் கொண்டு இயங்கும் டி.யுபி என்ற அழகு சாதன பொருட்கள் உற்பத்தி நிறுவனத்தில் சடோமி என்ற 25 வயதான இளம் பெண், கடந்த 2021-ம் ஆண்டு பணியில் சேர்ந்தார். அங்கு வேலைக்கு சேர்ந்த சில காலத்திலேயே, மேலதிகாரிகளின் அனுமதியின்றி வாடிக்கையாளரை சந்தித்ததாக அவர்மீது குற்றச்சாட்டு எழுந்தது.
இதனைத் தொடர்ந்து, நிறுவன தலைவர் மிட்சுரு சகாய் நேரடியாக சடோமியை விசாரிக்க அழைத்தார். அப்போது, அவரை “நாய்” என்று அவமதித்ததாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் கடும் மனஅழுத்தத்துக்குள்ளான சடோமி, 2022 ஜனவரியில் விடுப்பில் சென்று விட்டார். அதே ஆண்டின் ஆகஸ்டில், மனவேதனை தாங்காமல் அவர் தற்கொலைக்கு முயன்றார்.
உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட சடோமி, கோமா நிலையில் சிக்கினார். இதில் நீண்ட மாதங்கள் போராடிய அவர், 2023 அக்டோபரில் பரிதாபமாக உயிரிழந்தார்.இதையடுத்து, சடோமியின் பெற்றோர் தங்கள் மகளின் உயிரிழப்புக்கு நிறுவனமும், அதன் தலைவருமான மிட்சுரு சகாயும் நேரடி காரணம் என்று குற்றம் சாட்டினர்.
இந்த வழக்கு டோக்கியோ மாவட்ட நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது.இந்த விசாரணை முடிவில், சடோமியின் குடும்பத்துக்கு 150 மில்லியன் யென் (இந்திய மதிப்பில் ரூ.90 கோடி) இழப்பீடு வழங்குமாறு நிறுவனம் மீது நீதிமன்றம் உத்தரவிட்டது. அதோடு, மிட்சுரு சகாய் தனது பதவியிலிருந்து ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் தீர்ப்பளித்தது.
இதைத்தொடர்ந்து, இழப்பீடு வழங்கப்பட்டதோடு, மிட்சுரு சகாயும் பதவியை விட்டு விலகினார். மேலும், சடோமியின் குடும்பத்திடம் அதிகாரப்பூர்வமாக நிறுவனம் மன்னிப்பும் கேட்டது.