திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இனி அங்கபிரதட்சணம் செய்ய குலுக்கல் மூலம் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்படும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் தங்கள் வேண்டுதலுக்கு ஏற்ப அங்கப் பிரதட்சணம் செய்து வழிபடுவது வழக்கம். இந்த டிக்கெட்டுகளை பெறுவதற்கு திருமலை திருப்பதி தேவஸ்தானம் மூன்று மாதங்களுக்கு முன்னதாக ஆன்லைனில் முதலில் முன்பதிவு செய்யும் பக்தர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் இது வரை முன்பதிவு செய்யப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வந்தனர்.
இந்தநிலையில் இனி அங்கபிரதட்சனம் டோக்கன்கள் மூன்று மாதங்களுக்கு முன்பே குலுக்கல் மூலம் ஆன்லைனில் வெளியிடப்பட உள்ளது. அவ்வாறு டிசம்பர் மாதத்திற்கான அங்கபிரதசட்ணம் டோக்கன்களுக்கான குலுக்கல் பதிவு செய்ய செப்டம்பர் 18 முதல் 20 வரை ஆன்லைனில் பதிவு செய்யப்பட வேண்டும். பதிவு செய்த பக்தர்களில் குலுக்கலில் தேர்ந்தெடுக்கப்பட்ட பக்தர்களுக்கு இந்த டோக்கன்கள் ஆன்லைனில் வழங்கப்படும். இதில் வெள்ளிக்கிழமைகள் தவிர தினமும் 750 டோக்கன்களும் சனிக்கிழமைகளில் 500 டோக்கன்களும் வழங்கப்படும். பக்தர்கள் இந்த சேவையை மீண்டும் பெறுவதற்கான கால இடைவெளி 90 நாட்களுக்கு பதிலாக 180 நாட்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த மாற்றத்தைக் கவனத்தில் கொண்டு பக்தர்கள் தங்கள் அங்கபிரதட்சனம் செய்வதற்கான டோக்கன்களை முன்பதிவு செய்யுமாறு தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.