பாமக நிர்வாகி கொலை- சட்டம், ஒழுங்கு சீரழிவுக்கு எடுத்துக்காட்டு: அன்புமணி
Top Tamil News September 17, 2025 05:48 PM

பா.ம.க. நிர்வாகி இளந்தோப்பு வாசு கொலை செய்யப்பட்ட சம்பவம் சட்டம் - ஒழுங்கு சீரழிவுக்கு எடுத்துக்காட்டு. குற்றவாளிகளை உடனே கைது செய்ய வேண்டும் என பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ்  வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “செங்கல்பட்டு மாவட்டம் இளந்தோப்பு  கிராமத்தைச் சேர்ந்த பாட்டாளி மக்கள் கட்சியின் செங்கல்பட்டு மத்திய மாவட்ட துணை செயலாளரும்,  காட்டாங்கொளத்தூர் ஊராட்சி ஒன்றிய முன்னாள் பெருந்தலைவருமான  ஏ.வாசு கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார் என்ற செய்தியறிந்து  அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள், அப்பகுதியைச் சேர்ந்த பாட்டாளி மக்கள் கட்சியினர் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும்,  அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இளந்தோப்பு பகுதியைச் சேர்ந்த  வாசு அப்பகுதி மக்களின் செல்வாக்கைப் பெற்றவர். பட்ரவாக்கம் ஊராட்சி மன்றத் தலைவராகவும்,  காட்டாங்கொளத்தூர் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவராகவும்  பனியாற்றியுள்ளார்.  இந்த அளவுக்கு செல்வாக்கு மிக்க ஒருவரை பட்டப்பகலில் ஒரு கும்பல் படுகொலை செய்து விட்டு தப்பி ஓடுகிறது என்றால் தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கு எந்த அளவுக்கு சீர்குலைந்திருக்கிறது என்பதை அறிந்து கொள்ளலாம். ஏ.வாசுவின் படுகொலைக்கு தமிழக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும். ஏ.வாசுவின் படுகொலைக்கு காரணமான குற்றவாளிகளை  தமிழக அரசும், காவல்துறையும் உடனடியாக கைது செய்து சட்டப்படி தண்டனை பெற்றுத் தர வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.