திமுக முப்பெரும் விழா: விழாக்கோலம் பூண்டுள்ள கரூர்!
Seithipunal Tamil September 17, 2025 07:48 PM

திமுகவின் முப்பெரும் விழாவையொட்டி கரூர் மாநகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.

தி.மு.க. சார்பில்  அண்ணா பிறந்த நாள்,  பெரியார் பிறந்தநாள் மற்றும் தி.மு.க. தொடங்கப்பட்ட நாள் ஆகியவற்றை இணைத்து முப்பெரும் விழாவாக ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் 17-ந்தேதி நடத்தப்படுவது வழக்கம். அதன்படி இந்தாண்டுக்கான தி.மு.க.வின் முப்பெரும் விழாஇன்று   கரூர் கோடங்கிபட்டியில் நடைபெற உள்ளது. இதையொட்டி அங்கு சுமார் 50 ஏக்கர் நிலத்தில் பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த விழாவில் லட்சக்கணக்கானோர் கலந்து கொள்ள உள்ளனர்.

இந்த விழாவில் முதல்-அமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றுகிறார். இதற்காக அவர் இன்று காலை 10.30 மணிக்கு விமானம் மூலம் திருச்சி வருகிறார். பின்னர், அவர் அங்கிருந்து கார் மூலம் கரூர் வருகை தருகிறார்.முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி கரூரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் இந்த விழாவில் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் உள்பட கட்சியின் நிர்வாகிகள் பலர் கலந்து கொள்ள உள்ளனர்.இதனால் கரூர் மாவட்ட ம் விழாக்கோலம் பூண்டுள்ளது.ஏராளமான கட்சி நிர்வாகிகள் அங்கு குவிந்த வண்ணம் உள்ளனர்.

மேலும் இந்த விழாவில் கனிமொழி எம்.பி.க்கு பெரியார் விருதும், பாளையங்கோட்டை நகர மன்ற முன்னாள் தலைவர் சீதாராமனுக்கு அண்ணா விருதும், சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் ராமச்சந்திரனுக்கு கலைஞர் விருதும், மறைந்த தலைமை செயற்குழு உறுப்பினர் குளித்தலை சிவராமனுக்கு பாவேந்தர் பாரதிதாசன் விருதும், சட்டப்பேரவை முன்னாள் கொறடா மருதூர் ராமலிங்கத்திற்கு பேராசிரியர் விருதும், முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமிக்கு மு.க.ஸ்டாலின் விருதும், பத்திரிகையாளர் பன்னீர் செல்வத்துக்கு முரசொலி செல்வம் விருதினையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்க உள்ளார்.

மேலும் விழா நடைபெறும் இடத்தின் பக்கவாட்டில் தமிழக அரசின் சாதனைகளை விளக்கும் புகைப்படங்கள் அடங்கிய பதாகைகள் அமைக்கப்பட்டுள்ளன.கரூர் மாநகர் முழுவதும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை வரவேற்று பேனர்கள் வைக்கப்பட்டு உள்ளன. 
 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.