மோதிக்கு வயது 75: மீண்டும் விவாதப் பொருளாகும் 'பாஜகவின் அரசியல் ஓய்வு வயது'
BBC Tamil September 17, 2025 09:48 PM
Getty Images பிரதமர் மோதிக்கு செப்டம்பர் 17-ஆம் தேதியுடன் 75 வயதாகிறது.

கடந்த பத்தாண்டுகளாக, பாரதிய ஜனதா கட்சியில் தொடர்ந்து மீண்டும் மீண்டும் எழுப்பப்பட்டு வந்த முக்கியமான கேள்வி - 75 வயதிற்குப் பிறகு தலைவர்கள் தீவிர அரசியலில் இருந்து ஓய்வு பெற வேண்டுமா?

பாரதிய ஜனதா கட்சியில் மூத்த மற்றும் முக்கியமான தலைவர்களில் ஒருவருக்கு 75 வயது ஆகும் போது, 'வயது வரம்பு' என்ற பிரச்னை விவாதத்தின் மையமாகிறது.

தற்போது, பிரதமர் நரேந்திர மோதிக்கு 75 வயதாகும் நிலையில் இந்த பிரச்னை மீண்டும் விவாதங்களின் மையமாகிறது.

இந்திய அரசியலை, குறிப்பாக பாஜகவை உன்னிப்பாகக் கவனித்து வரும் சில நிபுணர்களிடம், பாஜகவின் '75 வயதில் அரசியல் ஓய்வு' என்ற கொள்கையைப் பற்றி பிபிசி பேசியது.

மூத்த பத்திரிகையாளரும் 'தி பிரிண்ட்' பத்திரிகையின் அரசியல் பிரிவு ஆசிரியருமான டி.கே. சிங்கிடம், பாஜகவின் அரசியல் ஓய்வு வயது பற்றி பிபிசி பேசியது. நரேந்திர மோதி பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட போது, கட்சியின் பல மூத்த தலைவர்கள் அதை ஏற்கவில்லை என்று அவர் கூறுகிறார்.

"எல்.கே. அத்வானி, முரளி மனோகர் ஜோஷி போன்ற தலைவர்கள் நரேந்திர மோதிக்கு எதிராக இருந்தனர். அவர்களுக்கு அமைச்சரவையில் இடம் கொடுத்தால், தனது சுதந்திரம் பாதிக்கப்படும் என்பதை நரேந்திர மோதி அறிந்திருந்தார். அதனால்தான் 75 வயதிற்குப் பிறகு, தலைவர்கள் தீவிர அரசியலில் இருந்து ஓய்வு பெறுவது தொடர்பான வாதம் தீவிரமாக முன்வைக்கப்பட்டது."

இருப்பினும், 75 வயதில் அரசியல் ஓய்வு என்ற கொள்கையை பாஜக ஒருபோதும் முறையாக அறிவித்ததில்லை என்று சுட்டிக்காட்டும் டி.கே.சிங், இது கட்சியின் விதிகளில் கூட குறிப்பிடப்படவில்லை என்று சொல்கிறார்.

"அந்த சமயத்தில், பாஜக தலைவர்களும் செய்தித் தொடர்பாளர்களும் பத்திரிகையாளர்களிடம் இந்த விஷயங்களை முறைப்படி 'பதிவு செய்ததில்லை' என்று டி.கே. சிங் கூறுகிறார்.இது குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்பட்டது. இருப்பினும் தீவிர அரசியல் ஓய்வு வயது தொடர்பாக ஒருபோதும் அதிகாரப்பூர்வமாகவோ முறையாகவோ கூறப்படவில்லை."

இதன் பின்னர், 2014-ஆம் ஆண்டில் எல்.கே அத்வானி, முரளி மனோகர் ஜோஷி மற்றும் பிற மூத்த தலைவர்கள், 'வழிகாட்டல் குழு' ஒன்றில் சேர்க்கப்பட்டனர். ஆனால், அந்தக் குழுவின் ஒரு கூட்டம் கூட இன்றுவரை நடைபெறவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த 'விதிமுறையை' முதலில் ஏற்றுக் கொண்டவர் ஆனந்திபென் படேல். 2016-ஆம் ஆண்டில் 75 வயதானதும் அவர் குஜராத் முதல்வர் பதவியில் இருந்து விலகிவிட்டார்.

பதவியிலிருந்து விலகிய போது, "நவம்பரில் எனக்கு 75 வயதாகப் போகிறது. பாஜகவின் சித்தாந்தம், கொள்கைகள் மற்றும் ஒழுக்கத்தின் மீது எனக்கு ஈர்ப்பு உண்டு. அவற்றை இன்று வரை பின்பற்றி வருகிறேன். சில காலமாக, கட்சியில் 75 வயதுக்கு மேற்பட்ட தலைவர்களும் தொண்டர்களும் தானாக முன்வந்து பதவிகளை விட்டு வெளியேறுகின்றனர், இதனால் இளைஞர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். மிகவும் சிறந்த இந்த பாரம்பரியத்தை நானும் பின்பற்ற விரும்புகிறேன்..." என்று தெரிவித்திருந்தார்.

ஆனந்திபென் படேலின் இந்தக் கருத்து, அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதற்கான வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்ற செய்தியை அளித்தது. இருப்பினும், அதன் பிறகு 75 வயதில் அரசியலில் இருந்து ஓய்வு என்ற சித்தாந்தத்தை பாஜகவில் யாரும் பின்பற்றவில்லை.

75 வயதில் ஓய்வு என்பது பாஜகவில் விதியாக உள்ளதா? Getty Images குஜராத் முதலமைச்சராக இருந்த ஆனந்திபென் படேல் 2016-ல் 75 வயதான போது தனது பதவி விலகினார்.

நீண்ட காலமாக பாஜகவின் அரசியலையும், ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் (ஆர்எஸ்எஸ்) பணிகளையும் பின்பற்றி வரும் பத்திரிகையாளர் அதிதி பட்னீஸ், 75 வயதில் தீவிர அரசியலில் இருந்து ஓய்வு பெறுவது என்பது "வெறும் குறிப்பு மட்டுமே" என்று கூறுகிறார்.

"தலைமைத்துவம் இளைஞர்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்ற நம்பிக்கை பாஜகவில் இருந்து வருகிறது. ஆனால் இந்த விதி செயல்படுத்தப்படுவதும், செயல்படுத்தப்படாததும், அரசியல் சூழ்நிலைகளைப் பொறுத்தது. கட்சி ஒரு புதிய முகத்தை முன்னிலைப்படுத்த விரும்பியதால், 2014-இல் அத்வானி மற்றும் முரளி மனோகர் ஜோஷியை ஓரங்கட்டுவது அவசியமாக இருந்தது" என்று அதிதி பட்னீஸ் பிபிசியிடம் தெரிவித்தார்.

இதேபோல், மூத்த பத்திரிகையாளர் சுனில் காதாடே பிபிசியிடம் பேசுகையில், பாஜகவின் '75 வயதில் ஓய்வு' என்பது உண்மையில் 'மென்மையான வழிகாட்டுதல்' மட்டுமே, கடுமையான விதிமுறை அல்ல. அவரைப் பொறுத்தவரை, "மூத்த தலைவர்களை மரியாதைக்குரிய முறையில் 'ஒதுக்கி வைப்பதற்காக' கட்சி அதைப் பயன்படுத்தியது."

"இருப்பினும், அரசியல் நிர்ப்பந்தம் ஏற்படும் போதெல்லாம் விதிவிலக்குகளும் அனுமதிக்கப்பட்டன. இதன் அடிப்படையில்தான், இந்த விதி அத்வானி, ஜோஷி போன்ற தலைவர்களுக்கு மட்டும்தானா அல்லது பொதுவாகவே அனைவருக்கும் பயன்படுத்தப்பட வேண்டுமா என்ற கேள்வி இன்று எழுப்பப்படுகிறது." என்றார்.

ஓய்வு வயது விவாதத்தை எதிர்கொண்டவர்கள் Getty Images பாஜக முன்னாள் தலைவர் யஷ்வந்த் சின்ஹா

மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த நஜ்மா ஹெப்துல்லா, கல்ராஜ் மிஸ்ரா ஆகியோர் மாநில ஆளுநர்களாக நியமிக்கப்பட்டனர். பின்னர், இந்த நியமனங்களுக்குக் காரணம் வயது என்றும் விவாதங்கள் எழுந்தன. கர்நாடக முதலமைச்சர் பதவியில் இருந்து பி.எஸ். எடியூரப்பா விலகும்போது, அவருக்கு 78 வயது என்பது குறிப்பிடத்தக்கது.

பாஜகவின் மூத்த தலைவர் யஷ்வந்த் சின்ஹாவும், அத்வானி, ஜோஷி போல விலக்கி வைக்கப்பட்டார். 2014-இல் பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு, 75 வயதுக்கு மேற்பட்ட அனைத்து தலைவர்களுக்கும் 'மூளை செயலிழப்பு' ஏற்பட்டுவிட்டதாக பிரதமர் மோதி கருதுவதாக யஷ்வந்த் சின்ஹா தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மறுபுறம், கட்சியின் விதிகளில் 75 வயதில் ஓய்வு என்பது கட்டாயம் இல்லை என்று சில நாட்களுக்கு முன்பு தெளிவுபடுத்தியிருந்த பாஜகவின் மூத்த தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா, பிரதமர் நரேந்திர மோதி 75 வயதில் ஓய்வு பெற மாட்டார் என்றும் கூறியிருந்தார்.

"பாரதிய ஜனதா கட்சியின் விதிகளில் அவ்வாறு எங்கும் எழுதப்படவில்லை. மோதி ஜி தனது பதவிக் காலத்தை முடிப்பார், எதிர்காலத்திலும் அவர் நாட்டை வழிநடத்துவார். இது தொடர்பாக பாரதிய ஜனதா கட்சியில் எந்த குழப்பமும் இல்லை." என்று அமித் ஷா கூறியிருந்தார்.

மோகன் பாகவத் அறிக்கையும் சர்ச்சையும் Getty Images ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் (கோப்புப்படம்)

இந்த ஆண்டு ஜூலை மாதம் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்த கருத்தால் 75 வயதில் ஓய்வு என்பது தொடர்பான விவாதங்கள் மீண்டும் தொடங்கின. அவர், மொரோபந்த் பிங்கிளே அனுபவத்தை ஆர்.எஸ்.எஸ் தலைவர் பகிர்ந்து கொண்டார்.

ஒரு விழாவில் மொரோபந்த் பிங்கிளேவுக்கு சிறப்பு செய்வதற்காக பொன்னாடை (சால்வை) போர்த்தப்பட்ட போது, "எனக்கு 75 வயதாகும் போது இந்த பொன்னாடையை போர்த்துகிறீர்கள். அதன் பொருள் எனக்குப் புரிகிறது. 75 வயதில் பாராட்டினால், உங்களுக்கான நேரம் முடிந்துவிட்டது, இப்போது தயவு செய்து நீங்கள் ஒதுங்கிக் கொண்டு எங்களை வேலை செய்ய விடுங்கள் என்பதுதான் அதன் அர்த்தம்" என்று அவர் கூறினார்.

இந்தச் சூழலில், "2024 மக்களவைத் தேர்தலின் போது, இந்தக் கருத்து வெளியாவதற்கு முன்பு, ஆர்.எஸ்.எஸ் இல்லாமலேயே பாஜக தேர்தலில் போட்டியிட முடியும் என்று அதன் தலைவர் ஜே.பி. நட்டா தெரிவித்திருந்தார்" என்று அதிதி பட்ணீஸ் கூறுகிறார்.

"அந்த நேரத்தில், பாஜகவின் எந்தவொரு மூத்த தலைவரும் ஜே.பி நட்டாவின் அறிக்கையை வெளிப்படையாக எதிர்க்கவில்லை. பாகவத் அறிக்கையை இந்தப் பின்னணியில் பார்க்க வேண்டும்" என்று அவர் கூறுகிறார்.

மோகன் பாகவத்தின் அரசியல் ஓய்வு தொடர்பான கருத்துக்குப் பிறகு, இந்த ஆண்டு 75 வயதை எட்டவிருக்கும் பிரதமர் மோதியை அவர் சுட்டிக்காட்டுகிறாரா என விவாதங்கள் தொடங்கின.

அதன்பிறகு, தனது கூற்றை தெளிவுபடுத்திய மோகன் பாகவத், பிரதமர் மோதியைப் பற்றியோ அல்லது பாஜக பற்றியோ தான் பேசவில்லை என்று கூறினார். மோகன் பாகவத்துக்கும் இந்த ஆண்டு 75 வயது ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஓய்வு வயது தொடர்பான பாஜகவினர் கருத்து என்ன? Getty Images பாஜக தலைமையகம்

இந்த விவகாரம் தொடர்பாக நேரிடையாக கருத்து தெரிவிப்பதை பாஜக செய்தித் தொடர்பாளர்கள் தவிர்த்து வந்தபோதிலும், சில தலைவர்கள் பெயர் வெளியிடாமல் தங்கள் கருத்தைத் தெரிவித்தனர்.

"சமீபத்திய தேர்தல்களில், 75 வயதுக்கு மேற்பட்ட பலர் கட்சிக்கு பயனுள்ளவர்களாக இருப்பார்கள் என்பதால் அவர்களுக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மறுபுறம், பல உறுப்பினர்களுக்கு 75 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்பதால் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை. அதிகாரப்பூர்வ விதி என்று எதுவும் இல்லாததால், ஓய்வு விதிமுறை அனைவருக்கும் பொருந்தாது" என்று பாஜகவின் முன்னாள் எம்பி ஒருவர் பிபிசியிடம் தெரிவித்தார்.

மறுபுறம், பாஜகவின் இளம் தலைவர் ஒருவர், "ஓய்வு பெறுவதற்கான வயது இருக்க வேண்டும், ஏனென்றால் அதுதான் உண்மையான ஜனநாயக செயல்முறையாக இருக்கும், அப்போதுதான் இளைஞர்களுக்கு வாய்ப்புகள் கிடைக்கும்." என்று பிபிசியிடம் கூறினார்.

ஆனால் பிரதமருக்கு வழங்கப்படும் விதிவிலக்கு பற்றியும் அவர் பிபிசியிடம் பேசினார், "பிரதமரின் விஷயமே வேறு. நடக்கக்கூட முடியாத சில அரசியல்வாதிகள் உள்ளனர், ஆனால் அவர்களுக்கு மாநிலங்களவைக்குச் செல்ல விருப்பம் இருக்கிறது. அவர்கள், இளைஞர்களை வழிநடத்தி கட்சியை மேலும் முன்னேற உதவ முடியாதா? அதிகாரப்பூர்வ அல்லது அரசியலமைப்பு பதவிகளை அவர்கள் வகிக்க வேண்டிய அவசியம் என்ன?" என கேள்வி எழுப்புகிறார்.

75 வயதில் ஓய்வு என்ற சர்ச்சை இப்போது முடிந்துவிட்டதா? Getty Images

இது தொடர்பான விவாதம் பாஜகவிற்குள் ஒருபோதும் முறையாக இருந்ததில்லை என்று நிபுணர்கள் நம்புகிறார்கள்.

"இந்தக் கேள்வி ஒருபோதும் கட்சிக்குள் இருந்ததில்லை, எதிர்காலத்திலும் இருக்காது. இது ஒரு போலி விவாதம். எதிர்காலத்தில் கூடிய விரைவில் 75 வயதை அடையும் பல பாஜக தலைவர்கள் உள்ளனர். பேசப்படாத விதியான 75 வயதில் அரசியல் ஓய்வு என்ற விதிமுறை, மிகவும் தேர்ந்தெடுக்கப்பட்ட முறையிலேயே எப்போதும் பயன்படுத்தப்படுகிறது," என்கிறார் அதிதி பட்னீஸ்.

சுனில் காதாடேவும் இதே கருத்தையே பிரதிபலிக்கிறார். "இந்த விவாதம் எங்கிருந்து வருகிறது? பாஜகவில் இதுபோன்ற விவாதம் ஒருபோதும் நடந்ததில்லை. அத்தகைய விதிமுறைகள் எதுவும் தலைமைக்கு ஒருபோதும் பொருந்தாது." என்றார்.

இந்த விதிமுறை அதிகாரபூர்வமானது அல்ல என்று டி.கே.சிங் நம்புகிறார், ஆனால் பாஜகவும் ஆர்.எஸ்.எஸ்ஸும் வரலாற்று ரீதியாக இளம் தலைவர்களுக்கு வாய்ப்புகளை வழங்கியுள்ளன.

"இது பாஜகவின் கலாசாரமாகவே இருக்கிறது. அருண் ஜெட்லி, ரவிசங்கர் பிரசாத் போன்ற இளம் தலைவர்களுக்கு அடல் பிஹாரி வாஜ்பாய் வாய்ப்புகளை வழங்கினார். பாஜகவின் மனிதவளக் கொள்கை மிகவும் வலுவானது. அது தொடர்ந்து புதிய தலைவர்களை மேலே கொண்டுவருகிறது. ஆர்.எஸ்.எஸ்ஸும் அதே கலாசாரத்தைக் கொண்டுள்ளது" என்று அவர் கூறுகிறார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.