விஜய்யிடம் ரசிகர்கள் இருக்கிறார்கள்... ஆனால் படைத்தளபதி இல்லை - ராஜேந்திர பாலாஜி..!
Top Tamil News September 17, 2025 11:48 PM

அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

எம்.ஜி.ஆர். உருவாக்கிய இயக்கம் அதிமுக. எம்.ஜி.ஆரின் படத்தைப் பயன்படுத்தக்கூடிய அருகதையுள்ள கட்சி அதிமுக மட்டும்தான். புதிதாக வரக்கூடிய கட்சிகள் எம்.ஜி.ஆர். படத்தைப் போட்டுக்கொண்டு அவருடைய செல்வாக்கைத் திருடப் பார்க்கிறார்கள். இதை மக்கள் புரிந்து கொள்வார்கள்.

விஜய்க்கு கூடும் கூட்டம் ரசிகர்கள் கூட்டம். அது வாக்காக மாற வாய்ப்பே இல்லை. திரை நட்சத்திரங்கள் யாராக இருந்தாலும் அவர்களைப் பார்ப்பதற்கு ஒரு பெரும் கூட்டம் கூடும். அது கட்டுக்கோப்பான கூட்டம் கிடையாது. காட்டாறு போல் ஓடக்கூடிய கூட்டம். விஜய் தலைமையில் 3-வது அணி அமைக்கலாம். ஆனால் அது வெல்வதற்கு வாய்ப்பே இல்லை. ஒரு தொகுதியில்கூட வெற்றிபெற முடியாது.

களத்தில் திமுக, அதிமுக இரு கட்சிகள் மட்டும்தான். மற்ற கட்சிகள் வரலாம், போகலாம், கூட்டணி அமைக்கலாம். ஆனால் வெல்லக்கூடிய வாய்ப்பு கிடையாது. அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சாலையில்தான் செல்கிறார். எங்கேயாவது ஒரு பிரச்சினை நடந்தது உண்டா?. வாரத்திற்கு ஒரு நாள் மக்களைச் சந்திக்கிறார் விஜய். அவருடைய ரசிகர்கள் ஏர்போட்டில் இருக்கும் பேரிகார்டை உடைப்பது, அத்துமீறுவதெல்லாம் அநாகரிகமான செயல். விஜய்யால் ஒரு இயக்கத்தை நடத்தக்கூடிய திறமை கிடையாது. எதோ வந்தார்கள், ஆட்டம் போட்டார்கள், சென்றார்கள் என்ற அளவில்தான் அவர்களின் அரசியல் வாழ்வு இருக்கும்.

விஜய்யிடம் ரசிகர்கள் இருக்கிறார்கள். ஆனால், படைத்தளபதி இல்லை. ஒரு இயக்கத்தை ஆரம்பித்து அதைக் கட்டுக்கோப்பாகக் கொண்டுசெல்வதற்கான பக்குவமோ, பாசறையோ அங்கு இல்லை. பக்குவப்பட்டு பல களங்கள் கண்டு அதற்குப் பின்புதான், அவர்கள் தேர்தலில் வெல்வார்களா? வீழ்வார்களா? என்று கணக்குப் போடமுடியும்.

இப்போது அவர்கள் தேர்தலில் மிகப்பெரிய பின்னடைவைச் சந்திப்பார்கள். எடப்பாடி பழனிச்சாமியை ஏற்றுக்கொண்டு ஒரு அணி உருவாகி உள்ளது. அந்த அணிதான் தேர்தலில் வெற்றி பெறும். அதிமுகவில் யாரைச் சேர்க்கவேண்டும், யாரைச் சேர்க்கக்கூடாது என்பது குறித்தெல்லாம் எடப்பாடி பழனிச்சாமிதான் முடிவு எடுப்பார். இவ்வாறு அவர் கூறினார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.