தமிழகத்தில் பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை தொடங்கிய நிலையில், அரசு பள்ளி மாணவர்களுக்கு NSS (தேசிய சேவைத் திட்டம்) சிறப்பு முகாம் நடத்த பள்ளிக்கல்வித்துறை புதிய உத்தரவு வழங்கியுள்ளது.
இதன்படி, NSS முகாம்கள் ஏழு நாட்கள் நடைபெற வேண்டும் என்றும், மாணவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்ட பின்னரே முகாம்கள் நடத்தப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் பங்கேற்பு, தங்குமிடம், உணவுப் பொருள், மருத்துவ வசதி உள்ளிட்ட அனைத்தும் முன்னேற்பாடாக திட்டமிட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், இந்த NSS முகாமில் பங்கேற்கும் மாணவர்கள், சுற்றுச்சூழல் பாதுகாப்பை ஊக்குவிக்கும் வகையில் 1,000 மரக்கன்றுகள் மற்றும் விதைகளை நட வேண்டும். மண் பாதுகாப்பு, மழைநீர் சேமிப்பு, போதைப்பொருள் தடுப்பு, சமூக நல விழிப்புணர்வு போன்ற தலைப்புகளில் மாணவர்களுக்கு பயிற்சி, விளக்கவுரை, குழுநடவடிக்கைகள், கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. NSS வாயிலாக மாணவர்கள் சமூக பங்களிப்பு குறித்து விழிப்புணர்வுடன் செயல்படுவதற்கான நடவடிக்கையாக இது அமைந்துள்ளது.