'இனப் படுகொலை': காஸாவில் இஸ்ரேல் நடவடிக்கை பற்றி ஐநா ஆணையம் கூறுவது என்ன?
BBC Tamil September 18, 2025 08:48 AM
AFP இஸ்ரேலிய ராணுவ நடவடிக்கைகள் 2023-ஆம் ஆண்டு அக்டோபர் முதல், 2025-ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை குறைந்தது 90% மக்கள் இடம்பெயர்வதற்கு வழிவகுத்துள்ளது

இஸ்ரேல் காஸாவில் இனப்படுகொலையை நிகழ்த்துவதாக கூறும் ஓர் அறிக்கை, விரிவான, கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாக்கும் அளவுக்கான ஆதாரங்களை வழங்குவதை நோக்கமாகக் கொண்டிருக்கிறது.

1948-ஆம் ஆண்டில் புதிதாக நிறுவப்பட்ட ஐநாவில் நிறைவேற்றப்பட்ட இனப்படுகொலை தீர்மானத்தை இஸ்ரேல் மீறியுள்ளதாக அந்த அறிக்கை கூறுகிறது.

'இனப்படுகொலை (Genocide)' என்ற வார்த்தையும் அதை குற்றச்செயலாக கூறும் இந்த தீர்மானமும், நாஜி ஜெர்மனியால் 60 லட்சம் யூத மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதிலிருந்து நேரடியாக தாக்கம் பெற்றதாகும்.

போர் தொடர்பான சட்டங்கள் மற்றும் சர்வதேச மனிதநேயச் சட்டத்தை உருவாக்க வழிவகுத்த தீர்மானங்கள் மற்றும் உடன்படிக்கைகளை காஸாவில் தங்களின் நடவடிக்கைகள் மீறியதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளை இஸ்ரேல் மறுத்துள்ளது.

தற்காப்பு, தங்கள் நாட்டு குடிமக்கள் மீதான பாதுகாப்பு மற்றும் 2023-ஆம் ஆண்டு அக்டோபர் 7 அன்று ஹமாஸ் மற்றும் இஸ்லாமிய ஜிஹாத் அமைப்பால் பிடிக்கப்பட்ட பணயக்கைதிகளை விடுவிப்பதை வலியுறுத்தும் விதமாகவே தங்கள் நடவடிக்கைகள் அமைந்திருப்பதாக இஸ்ரேல் நியாயப்படுத்துகிறது.

இஸ்ரேலிய பணயக்கைதிகளில் சுமார் 20 பேர் இன்னும் உயிருடன் இருப்பதாக நம்பப்படுகிறது.

ஹமாஸால் பரப்பப்படும் யூத எதிர்ப்பு பொய்களால் ஈர்க்கப்பட்டுள்ளதாக, இஸ்ரேலியர்கள் அந்த அறிக்கையை நிராகரித்துள்ளனர்.

இந்த அறிக்கை, ஐநா மனித உரிமைகள் கவுன்சிலால் அமைக்கப்பட்ட விசாரணைக் குழுவிடமிருந்து தொகுக்கப்பட்ட தகவல்களாகும். தங்கள் நாட்டுக்கு எதிராக பாரபட்சமாக செயல்படுவதாக கூறி, இந்த கவுன்சிலை இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா புறக்கணித்துள்ளது.

ஆனால், இஸ்ரேலின் நடவடிக்கைகளுக்கு எதிராக வளர்ந்துவரும் சர்வதேச கண்டனத்துக்கு இந்த அறிக்கை முடிவுகள் பங்களிப்பதாக உள்ளன.

இஸ்ரேலின் பாரம்பரிய மேற்கத்திய நட்பு நாடுகளும் ஆபிரஹாம் உடன்படிக்கைகளில் (Abraham Accords) இஸ்ரேலுடனான தங்கள் நாட்டு உறவுகளை இயல்புநிலைக்குக் கொண்டுவந்த வளைகுடா அரபு முடியாட்சி நாடுகளும் இவ்விவகாரம் தொடர்பாக இஸ்ரேலை கண்டித்துள்ளன.

AFP via Getty Images கடும் வான்வழி தாக்குதல்கள் மற்றும் கட்டடங்கள், உள்கட்டமைப்பு வசதிகளை அழிப்பது ஆகியவற்றை உள்ளடக்கிய இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கையால் காஸா பெருமளவு அழிவை சந்தித்துள்ளது

அடுத்த வாரம் நியூயார்க்கில் ஐநா பொதுச் சபையில், சுதந்திரமான பாலத்தீன நாட்டுக்கான இறையாண்மையை அங்கீகரிக்கும் மற்ற ஐநா உறுப்பினர் நாடுகளுடன் பிரிட்டன், பிரான்ஸ், ஆஸ்திரேலியா, கனடா ஆகிய நாடுகள் இணைய உள்ளன.

இந்த நகர்வு பெரிதும் அடையாள ரீதியான நடவடிக்கையாக இருக்கும். நூற்றாண்டுக்கு முன்பு ஐரோப்பாவிலிருந்து பாலத்தீனத்தில் குடியேற சியோனிய யூதர்கள் (Zionist Jews) வந்தபோது தொடங்கிய இந்த மோதலின் எதிர்காலம் குறித்த விவாதத்தை இது மாற்றும்.

ஆனால், பாலத்தீனத்தை அங்கீகரிப்பது யூத எதிர்ப்பு என்றும் ஹமாஸ் பயங்கரவாதத்திற்கான வெகுமதி என்றும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கண்டனம் தெரிவித்துள்ளார்.

பாலத்தீன நாடு, இஸ்ரேலியர்களை ஆபத்தில் ஆழ்த்தும் என்பதால், ஜோர்டான் ஆறு மற்றும் மத்திய தரைக்கடலுக்கு இடைப்பட்ட நிலத்தின் எந்த பகுதியிலும் பாலத்தீனர்கள் ஒருபோதும் சுதந்திரம் பெற முடியாது என்று அவர் தெரிவித்தார். அந்த நிலம் கடவுளால் யூத மக்களுக்காக மட்டுமே வழங்கப்பட்டது என இஸ்ரேலிய மத தேசியவாதிகள் நம்புகின்றனர்.

1948-ஆம் ஆண்டு தீர்மானத்தின்படி, இனப்படுகொலை என்பது, ஓர் தேசிய, இன, மதக்குழுவின் மீது பகுதியாகவோ அல்லது மொத்தமாகவோ வேண்டுமென்றே அழிக்கும் நோக்கத்துடன் செயல்படுவது என விவரிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் காஸாவில் பாலத்தீனர்கள் மீதான தாக்குதல் அவ்வாறு குறிப்பிடப்படுகிறது.

AFP via Getty Images காஸாவின் பல பகுதிகளில் "மனிதனால் உருவாக்கப்பட்ட பட்டினி" நிலவுவதாக ஐநாவின் பல முகமைகள் கூறியுள்ளன இஸ்ரேல் மீதான குற்றச்சாட்டுகள்

காஸாவில் உள்ள பாலத்தீனர்கள் மற்றும் இஸ்ரேலில் அமைந்துள்ள சிறைகளில் உள்ள பாலத்தீனர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்து இந்த அறிக்கையில் விவரிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேல் மீதான குற்றச்சாட்டுகள் அடங்கிய நீண்ட பட்டியலில், அந்நாடு சட்ட ரீதியாக காக்க வேண்டிய பொதுமக்கள் மீதும் குறிவைப்பதாகவும், "உணவு, தண்ணீர் மற்றும் மருந்துகள் பற்றாக்குறையின் மூலம் பாலத்தீனர்களுக்கு மரணத்தை ஏற்படுத்தும் வகையிலான மனிதநேயமற்ற சூழல்களை உருவாக்குதல்" போன்றவையும் குறிப்பிடப்பட்டுள்ளன.

உணவு தொடர்பான அவசர சூழலை மதிப்பீடு செய்யும் சர்வதேச அமைப்பான ஐபிசியின் (IPC- கடுமையான உணவுப் பாதுகாப்பின்மை வகைப்பாடு) கூற்றுப்படி, பஞ்சம் மற்றும் பரவலான பட்டினிக்கு வழிவகுத்த இஸ்ரேலிய தடையை இது குறிக்கிறது.

இஸ்ரேலிய ராணுவம் காஸா நகரத்தில் உள்ள பொதுமக்களை தெற்கு நோக்கி நகருமாறு உத்தரவிட்டதையடுத்து, அங்கு தற்போது நடைபெறும் வலுக்கட்டாயமான இடம்பெயர்வு குறித்தும் ஐநாவின் இந்த புதிய அறிக்கை விவரித்துள்ளது.

இதனால் சுமார் 10 லட்சம் பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக நம்பப்படுகிறது. வான்வழி தாக்குதல்கள் மற்றும் காஸா நகரின் அடையாளமாக விளங்கும் உயர்ந்த கட்டடங்கள் உட்பட பல கட்டடங்களை அழிப்பதன் மூலமாகவும் இஸ்ரேலிய தாக்குதலின் வேகம் அதிகரித்து வருகிறது.

காஸா நகரின் அடையாளமாக விளங்கும் கட்டடங்களை ஹமாஸின் "பயங்கரவாத கோபுரங்கள்" என இஸ்ரேலிய ராணுவம் அழைக்கிறது.

"காஸாவில் குழந்தை பிறப்பை தடுக்கும் நோக்கத்துடனான நடவடிக்கைகளையும்" இஸ்ரேல் மேற்கொள்வதாகவும் அந்த அறிக்கை கூறுகிறது.

காஸாவில் மிகப்பெரிய கருத்தரிப்பு கிளீனிக் மீதான இஸ்ரேலிய தாக்குதலில் சுமார் 4000 கருமுட்டைகள் மற்றும் 1000 விந்து மாதிரிகள் மற்றும் கருவுறாத முட்டைகள் அழிக்கப்பட்டதாக வெளியான தகவலை இது குறிக்கிறது.

இனப்படுகொலையை தூண்டியதாக 3 பேர் மீது குற்றச்சாட்டு AFP via Getty Images இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு (இடது), அதிபர் ஐஸக் ஹெர்சோக் (நடுவில் இருப்பவர்), பாதுகாப்பு முன்னாள் அமைச்சர் யோவ் கேலண்ட் (வலதுபக்கத்திலிருந்து இரண்டாவதாக இருப்பவர்) ஆகியோர் இனப்படுகொலையை தூண்டியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.

ராணுவ நடவடிக்கையின் விளைவுகளை தவிர்த்து, இந்த 'இனப்படுகொலைக்கு' தூண்டியதாக இஸ்ரேலிய அதிகாரிகள் மூன்று பேரையும் ஐநாவின் அறிக்கை கோடிட்டுக் காட்டியுள்ளது.

அவர்களுள் ஒருவர், இஸ்ரேலின் அப்போதைய பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலண்ட், 2023-ஆம் ஆண்டு அக்டோபர் 9 அன்று, "மனித மிருகங்களுடன்" இஸ்ரேல் சண்டையிடுவதாக கூறியிருந்தார்.

பிரதமர் நெதன்யாகுவை போன்று யோவ் கேலண்ட்டும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் போர் குற்றச்சாட்டுகள் தொடர்பாக கைது வாரண்டை எதிர்கொண்டுள்ளார்.

அமலேக்குக்கு (Amalek) எதிரான யூத சண்டை குறித்த கதையுடன் காஸா போரை ஒப்பிட்டு, அதை தூண்டியதாக நெதன்யாகுவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளார்.

அமலேக் ஆண்கள், பெண்கள், குழந்தைகள், அவர்களின் உடைமைகள் மற்றும் விலங்குகளை அழிக்குமாறு யூத மக்களுக்கு கடவுள் கூறியதாக பைபிளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள மூன்றாவது அதிகாரி ஐஸக் ஹெர்சோக், இவர் போரின் முதல் வாரத்தில் ஹமாஸுக்கு எதிராக நிற்கவில்லையென காஸாவின் பாலத்தீனர்களை கண்டித்தார். 2023-ஆம் ஆண்டு அக்டோபர் 13 அன்று, "முழு தேசமும்தான் இதற்கு பொறுப்பு" என கூறினார்.

கடும் சட்டவிதிகள்

சட்டபூர்வமாக இனப்படுகொலை குற்றத்தை நிரூபிப்பது கடினம். இனப்படுகொலை தீர்மானத்தை உருவாக்கியவர்கள் விதிகளை கடுமையாக வடிவமைத்தனர். சர்வதேச நீதிமன்றம் அதுகுறித்து கூறும் விளக்கமும் உயர்ந்த விதிமுறைகளை கொண்டதாக இருந்தது.

ஹேக் நகரத்தில் அமைந்துள்ள சர்வதேச நீதிமன்றத்தில், பாலத்தீனர்களுக்கு எதிராக இஸ்ரேல் இனப்படுகொலை செய்வதாக தென்னாப்பிரிக்கா வழக்கு ஒன்றை தொடுத்தது. இந்த வழக்கில் தீர்ப்பளிக்கப்பட பல ஆண்டுகளாகும்.

ஆனால், காஸாவில் இஸ்ரேலின் தாக்குதல் தொடர்ந்து வரும் நிலையில் ஐநா அறிக்கை இந்த போர் தொடர்பான சர்வதேச பிளவுகளை இன்னும் ஆழப்படுத்தும்.

ஒருபுறம், காஸாவில் நடைபெறும் கொலைகள் மற்றும் அழிவுகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என வலியுறுத்தும், இஸ்ரேலின் தடைகளால் உருவாகியுள்ள பஞ்சத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் நாடுகள் உள்ளன. அவற்றில் பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகள் உள்ளன.

மறுபுறம், இஸ்ரேலும் அமெரிக்காவும் உள்ளன. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிர்வாகம், முக்கியமான ராணுவ உதவி மற்றும் ராஜீய ரீதியிலான பாதுகாப்பை வழங்கிவருகிறது, இவை இல்லாமல் காஸாவில் போரை தொடரவும் மத்திய கிழக்கில் குண்டுவீச்சு நடவடிக்கைகளை தொடரவும் இஸ்ரேல் போராட வேண்டிய நிலை உள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.