மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த ஏழாம் வகுப்பு மாணவி, 20 நாட்களாக காணாமல் போயிருந்த நிலையில், சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்த கொலைக்கு, பள்ளியின் ஆசிரியர் மனோஜ் குமார் பால் என்பவரே காரணம் என மாணவியின் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். அவர் கைது செய்யப்பட்டு, காவல்துறையினரின் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
காணாமல் போன மாணவி, ஆகஸ்ட் 28 அன்று பள்ளிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. இது தொடர்பாக, அவரது குடும்பத்தினர் காவல்துறையிடம் புகார் அளித்தனர். விசாரணை மேற்கொண்ட காவல்துறை, ஆசிரியரான மனோஜ் குமார் பால் மீது சந்தேகம் கொண்டு அவரை கைது செய்தது. தொடர் விசாரணையில், அவரே மாணவியை கடத்தி கொன்றதை ஒப்புக்கொண்டதாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
காலிதங்கா கிராமத்திற்கு அருகே உள்ள நீர் தேங்கிய பகுதியில், மாணவியின் உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. உடலின் நிலை மோசமாக இருந்ததால், மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டாரா என்பதை உறுதிப்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
கொலை செய்யப்பட்ட மாணவி, ஏற்கெனவே தன் தாய் மற்றும் தந்தையிடம், ஆசிரியர் மனோஜ் குமார் பால், தன்னிடம் தவறாக நடந்துகொண்டதாக தெரிவித்துள்ளார். இது குறித்து அவர்கள் காவல்துறையில் புகார் அளித்திருந்தனர். எனினும், இந்த கொலைக்கான சரியான காரணம் குறித்து காவல்துறை தொடர்ந்து விசாரணை செய்து வருகிறது.
Edited by Siva