பாலிவுட் நடிகை திஷா பதானியின் பரேலியில் உள்ள இல்லத்திற்கு வெளியே நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் தொடர்புடையதாகக் கூறப்படும் ரோஹித் கோதாரா–கோல்டி பரார் கும்பலின் முக்கிய உறுப்பினர்களான இருவர், புதன்கிழமை உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தில் நடைபெற்ற என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இந்த மோதல், டெல்லி போலீஸ் சிறப்புப் பிரிவு, உ.பி. எஸ்.டி.எஃப் மற்றும் ஹரியானா எஸ்.டி.எஃப் ஆகியவற்றின் கூட்டு நடவடிக்கையாக நடத்தப்பட்டது என அதிகாரிகள் தெரிவித்தனர். சுட்டுக்கொல்லப்பட்டவர்களில் ஒருவர் ஹரியானாவின் ரோஹ்தக்கைச் சேர்ந்த ரவீந்தர், மற்றவர் சோனிபட்டைச் சேர்ந்த அருண் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். என்கவுண்டரின் போது, டெல்லி சிறப்புப் பிரிவைச் சேர்ந்த ஒரு அதிகாரி காயமடைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
“பரேலி துப்பாக்கிச் சூடு வழக்கில், இந்த இருவரும் நேரடியாக தொடர்புடையவர்கள். இது ஒரு சாத்தியமான மிரட்டல் முயற்சி என்றும், முக்கிய பிரபலங்களின் பாதுகாப்பு குறித்து கவலை ஏற்படுத்தும் வகையில் இருந்தது,” என டெல்லி போலீசின் சிறப்புப் பிரிவு அதிகாரி ஒருவர் கூறினார்.
கடந்த செப்டம்பர் 12ஆம் தேதி அதிகாலை 3.45 மணியளவில், திஷா பதானியின் பரேலி இல்லத்தின் வெளிப்பகுதியில் அடையாளம் தெரியாத நபர்கள் பல முறை துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் யாருக்கும் காயமடையவில்லை என்றாலும், அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் பதற்றம் ஏற்பட்டது.
இதுதொடர்பாக பரேலி கோட்வாலி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், சம்பவம் குறித்து உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். மாநிலத்தில் குற்றங்களை பொறுத்து ‘பூஜ்ஜிய சகிப்புத்தன்மை’ கொள்கையை அரசு கடைப்பிடிக்கிறது என்றும் அவர் வலியுறுத்தினார்.
பரேலி சூடு தொடர்பான சிசிடிவி காட்சிகள், உளவுத்துறை தகவல்கள் மற்றும் உரிய பெற்ற ஆதாரங்களை போலீசார் ஆராய்ந்தனர். இதில், துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் ஹரியானாவின் ரோஹ்தக் மாவட்டத்தில் உள்ள காஹ்னியைச் சேர்ந்த ரவீந்தர், சோனிபட்டில் உள்ள கோஹானா சாலையைச் சேர்ந்த அருண் என அடையாளம் உறுதி செய்யப்பட்டது. இது தொடர்பாக ஏ.டி.ஜி அமிதாப் யாஷ் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதனையடுத்து, காசியாபாத்தின் ட்ரோனிகா நகரத்தில் இருவரையும் கைது செய்ய முயன்றதில் துப்பாக்கிச் சண்டை ஏற்பட்டது. இதில் இருவரும் பலத்த காயமடைந்து மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டபோதும் உயிரிழந்தனர்.
சம்பவ இடத்திலிருந்து ஒரு க்ளாக், ஒரு ஜிகானா துப்பாக்கி மற்றும் பல தோட்டாக்கள் போலீசாரால் மீட்கப்பட்டன. இருவரும் ரோஹித் கோதாரா–கோல்டி பரார் கும்பலின் முக்கிய உறுப்பினர்களாக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, ரவீந்தர் மீது ஏற்கனவே பல்வேறு குற்றவியல் வழக்குகள் நிலுவையில் உள்ளன என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தலைமறைவாக உள்ள குற்றவாளிகளை கண்டறிய போலீசார் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.