புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது தெரியுமா?
Top Tamil News September 18, 2025 09:48 AM

தமிழ் மாதம் புரட்டாசி தொடங்கியதும், இந்த மாதத்தில் வீட்டில் உள்ளவர்கள் யாரும் அசைவம் சாப்பிடக் கூடாது என பெரியவர்கள் சொல்வது வழக்கம்.அதற்கான உரிய விளக்கத்தை குழந்தைகளுக்கோ, அல்லது அசைவம் சாப்பிட விரும்புபவர்களுக்கோ சொன்னால் அவர்களும் ஏற்றுக் கொள்வார்கள்.

பொதுவாக புரட்டாசி மாதத்தின் போது தான் வெயிலும், காற்றும் குறைந்து மழை ஆரம்பிக்கும் காலமாக உள்ளது. இதனால் இதுவரை பூமி வெயிலால் சூடாகி இருக்கும். மழை பொழியும் போது, அதை ஈர்த்து புவியின் வெப்பத்தை குறைக்கும் பொருட்டு, தன்னுள் இருக்கும் சூட்டை வெளியில் விட ஆரம்பிக்கும்.இதனால் புரட்டாசி மாதம் சூட்டை கிளப்பி விடும். இது வெயில் காலத்தில் சூடான காலநிலையைக் காட்டிலும் மிக மோசமான விளைவுகளை தரக் கூடியது.

இந்த காலத்தில் அசைவம் சாப்பிடுவதால், உடல் சூட்டை மேலும் அதிகரிக்கச் செய்து, நம் உடல் நலனை மேலும் பாதிக்கச் செய்யும்.

இந்த காலத்தில் உடல் சூட்டால் ஏற்படக்கூடிய உடல்நல பிரச்னைகள் :

  • தோல் சூடாவதோடு, உலர்ந்து போகுதல்
  • அதிகமாக வியர்த்தல்
  • உடல் வெப்பநிலை 105 பேரன்ஹீட் வரை அதிகரிக்க வாய்ப்பு
  • இதயத்துடிப்பு மற்றும் மூச்சு வாங்குதல் அதிகரிக்க வாய்ப்பு
  • வயிறு தொடர்பான பிரச்னையை ஏற்படுத்தும்

ஆன்மிக காரணம்:
ஜோதிடத்தில் 6வது ராசியாக அமைந்துள்ளது கன்னி ராசி. இந்த கன்னி ராசி அதிபதியாக புதன் பகவான் உள்ளார். மேலும் புதன் மகா விஷ்ணுவின் சொரூபம் எனபதாலும், புதன் பெருமாளுக்கு உரிய கிரகமாக பார்க்கப்படுகிறது.புதன் சைவப்பிரியர் ஆவார். அதனால், அவர் ஆட்சி செய்யும் கன்னி ராசிக்கான மாதம் புரட்டாசியில், அசைவ உணவுகளை எடுத்துக் கொள்ளாமல், விரதம் இருந்து கோயிலுக்கு சென்று வழிபாடு நடத்த வேண்டும் என சொல்லுகின்றனர்.

உடல் நலத்தை போற்றி பாதுகாக்கும் பொருட்டு புரட்டாசி மாதம் முழுவதும் விரதம் இருக்க வேண்டும் என நம் முன்னோர்கள் கூறினர். அதோடு, இந்த காலத்தில் ஏற்படும் உடல் நல பிரச்னையை, பெருமாள் கோயிலில் கொடுக்கப்படும் துளசி தீர்த்தம் கட்டுப்படுத்தும் ஆற்றல் மிக்கது. இதனால் தான் புரட்டாசி மாதத்தில் விரதம் இருந்து பெருமாள் கோயிலுக்கு செல்ல வேண்டும் என முன்னோர்கள் ஒரு பழக்கத்தை வைத்துள்ளனர்.

நம் உடல் நலனுக்காக நம் முன்னோர்கள் கடைப்பிடித்த புரட்டாசி விரத முறையை, நாமும் கடைப்பிடித்து வாழ்க்கையை ஆரோக்கியமானதாக அனுபவிப்போம்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.