தமிழ்நாட்டில் ஏ.டி.எம் மையங்களில் பணம் எடுக்க வருகிறவர்களை இலக்காக வைத்து பண மோசடியில் ஈடுபட்டதாக எழுந்த புகாரில் கர்நாடகாவை சேர்ந்த பொறியாளரை செப்டம்பர் 13 அன்று தாம்பரம் காவல்துறை கைது செய்துள்ளது.
பணம் எடுக்கத் தெரியாமல் தடுமாறும் நபர்களுக்கு உதவுவதுபோல நடித்து, அட்டையை மாற்றி மோசடியை அரங்கேற்றியதாகக் கூறுகிறார், தாம்பரம் காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர்.
ஏடிஎம் மையங்களில் எப்படியெல்லாம் மோசடிகள் நடக்கின்றன? பொதுமக்கள் செய்ய வேண்டியது என்ன?
சென்னையை அடுத்துள்ள பழைய பெருங்களத்தூரில் வசித்து வரும் 58 வயதான தமிழ்ச்செல்வி, வேளச்சேரியில் உள்ள அரசு நிறுவனம் ஒன்றில் கண்காணிப்பாளராக பணிபுரிந்து வருகிறார்.
கடந்த ஜூலை 30-ஆம் தேதி இரவு தாம்பரம் ரயில் நிலைய வளாகத்தில் உள்ள ஏ.டி.எம் மையத்துக்கு இவர் சென்றுள்ளார்.
''அங்கு ஏ.டி.எம் அட்டை மூலமாக ஆயிரம் ரூபாயை எடுக்க முயற்சி செய்தேன். ஆனால், பணம் வரவில்லை'' எனப் புகார் மனுவில் தமிழ்ச்செல்வி தெரிவித்துள்ளார்.
அப்போது அங்கிருந்த நபர் ஒருவர், பணத்தை எடுப்பதற்கு உதவி செய்வதாகக் கூறியுள்ளார். அதை நம்பி தமிழ்ச்செல்வியும் ஏ.டி.எம் அட்டையைக் கொடுத்துள்ளார். அந்த நபரும், பணம் எடுப்பதற்கு முயற்சித்துள்ளார்.
புகாரில் கூறப்பட்டது என்ன?''பணம் வராததால் என்னிடம் ஏ.டி.எம் அட்டையைக் கொடுத்துவிட்டுச் சென்றுவிட்டார். அன்று இரவு இரும்புலியூர் பகுதியில் உள்ள ஏ.டி.எம் மையம் ஒன்றில் இருந்து நான்கு முறை தலா பத்தாயிரம் ரூபாய் எடுக்கப்பட்டுள்ளது'' என, புகார் மனுவில் தமிழ்ச்செல்வி கூறியுள்ளார்.
மறுநாள் ஆவடியில் உள்ள ஏ.டி.எம் மையம் ஒன்றில் இருந்து 40 ஆயிரம் ரூபாய் எடுக்கப்பட்டுள்ளதாக அவருக்கு குறுந்தகவல் சென்றுள்ளது.
"ரயில் நிலைய வளாகத்தில் உள்ள ஏ.டி.எம்மில் பணம் வராததால் தமிழ்ச்செல்வியிடம் இருந்து ஏ.டி.எம் அட்டையை அந்த நபர் வாங்கியுள்ளார். பிறகு அவரது அட்டைக்குப் பதிலாக வேறு அட்டையை மாற்றிக் கொடுத்துள்ளார். மிக எளிதாகவே இதனை அவர் செய்துள்ளார்" எனக் கூறுகிறார், தாம்பரம் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் முத்து சுப்ரமணியன்.
"தமிழ்ச்செல்வியின் வங்கிக் கணக்கில் மொத்தமாக 80 ஆயிரம் ரூபாய் இருந்துள்ளது. அதை முழுவதுமாக அந்த நபர் எடுத்துள்ளார்" என பிபிசி தமிழிடம் கூறிய முத்து சுப்ரமணியன், "இதேபோல், திண்டுக்கல், பவானி ஆகிய பகுதிகளில் மோசடி செய்துள்ளார்" எனவும் அவர் தெரிவித்தார்.
தமிழ்ச்செல்வி அளித்த புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த தாம்பரம் குற்றப் பிரிவு போலீஸார், ஏ.டி.எம் மையங்களில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தினர்.
இந்த வழக்கில் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த திம்மராயப்பா என்ற நபரை, போலீஸார் கைது செய்தனர். பொறியியல் பட்டதாரியான திம்மராயப்பா, ஐ.டி நிறுவனம் ஒன்றில் ஊழியராகவும் பிறகு தனியார் பாலிடெக்னிக் கல்லூரி ஒன்றில் ஆசிரியராக பணிபுரிந்ததாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.
"தாம்பரம் காவல்நிலையத்தில் இருந்தபடியே சிசிடிவி மூலம் அனைத்து இடங்களையும் கண்காணிக்க முடியும். இந்த நபர் தான் குற்றத்தில் ஈடுபட்டவர் என முடிவான பிறகு காவல்துறையின் வாட்ஸ்ஆப் குழுக்களில் பதிவிட்டோம். தமிழ்நாட்டில் இவர் மீது ஐந்துக்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் உள்ளன" எனக் கூறுகிறார், காவல் ஆய்வாளர் முத்து சுப்ரமணியன்.
'எல்லைப் பகுதிகள்தான் இலக்கு'"தொடக்கத்தில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள நபரைக் கண்டறிவதில் சிரமம் ஏற்பட்டது. வட தமிழ்நாட்டின் எல்லைப் பகுதிகளை மட்டும் இலக்காக வைத்து ஏ.டி.எம் மோசடிகளில் ஈடுபட்டு வந்தார். இப்பகுதிகளில் திம்மராயப்பா மீது அதிக குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன" என்கிறார், காவல் ஆய்வாளர் முத்து சுப்ரமணியன்.
தொடர்ந்து பேசிய அவர், "இரண்டு மாதங்களுக்குப் பிறகு மீண்டும் தாம்பரம் பகுதியில் உள்ள ஏ.டி.எம் மையங்களை நோக்கி திம்மராயப்பா வந்துள்ளார். புகார் கொடுத்த தமிழ்ச்செல்வியும், இந்த நபர்தான் ஏ.டி.எம் மையத்தில் இருந்ததாக அடையாளம் காட்டினார். அதன்பிறகு அவரைக் கைது செய்தோம்" என்கிறார்.
வங்கி குறித்தும் ஏ.டி.எம் அட்டைகள் குறித்தும் சரிவர புரிதல் இல்லாத நபர்களை இலக்காக வைத்து இப்படியொரு மோசடியில் திம்மராயப்பா தொடர்ந்து ஈடுபட்டு வந்ததாகக் கூறுகிறார், காவல் ஆய்வாளர் முத்து சுப்ரமணியன்.
"ஏ.டி.எம் மையங்களில் வாடிக்கையாளரின் பின்னால் நின்று ரகசிய குறியீட்டு எண்ணை தெரிந்து கொள்கிறார். பிறகு உதவி செய்வதுபோல நடித்துவிட்டு வங்கியின் நிறத்துக்கு ஏற்ப கார்டை மாற்றிக் கொடுப்பது அவரது உத்தியாக இருந்துள்ளது" எனவும் அவர் தெரிவித்தார்.
'4 மொழிகள்... 50 ஏ.டி.எம் அட்டைகள்'கொரோனா தொற்று காலத்தில் ஆன்லைன் சூதாட்டத்தில் பெரும் பணத்தை திம்மராயப்பா இழந்துவிட்டதால் ஏ.டி.எம் மையங்களுக்கு வருகிறவர்களை இலக்காக வைத்து மோசடியில் ஈடுபட்டு வந்ததாகவும் தாம்பரம் காவல்துறை தெரிவித்துள்ளது.
திம்மராயப்பாவிடம் இருந்து 15 ஆயிரம் ரொக்கமும் சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்ட ஏ.டி.எம் அட்டைகளையும் தாம்பரம் காவல்நிலைய குற்றப் பிரிவு போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
"கைதான நபருக்கு தமிழ், ஆங்கிலம், கன்னடம், தெலுங்கு என நான்கு மொழிகள் தெரியும் என்பதால் ஏமாற்றுவது எளிதாக இருந்துள்ளது. மக்களின் அறியாமையை மூலதனமாக்கி மோசடி செய்துள்ளார்" எனக் கூறுகிறார், காவல் ஆய்வாளர் முத்து சுப்ரமணியன்.
திம்மராயப்பா மீது மோசடியில் ஈடுபட்டது, தகவல் தொழில்நுட்பத்தைத் தவறாகப் பயன்படுத்துதல் ஆகிய பிரிவுகளில் தாம்பரம் காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
"ஏ.டி.எம் இயந்திரத்தைக் கையாள தெரியாவிட்டால் நம்பகமான நபர்களுடன் சென்று பணம் எடுக்க வேண்டும். தவிர, ஏ.டி.எம் அட்டையின் பின்புறம் சிலர் ரகசிய எண்ணை எழுதி வைக்கின்றனர். பணம் பறிபோவதற்கான காரணங்களில் இதுவும் ஒன்று" எனக் கூறுகிறார், காவல் ஆய்வாளர் முத்து சுப்ரமணியன்.
"பணத்தை எடுத்துக்கொடுக்க உதவும்போது ரகசிய குறியீட்டு எண் தெரிந்துவிடும் என்பதால், எளிதில் மோசடி நடக்கிறது" என்கிறார், சைபர் தொழில்நுட்ப வல்லுநரும் வழக்கறிஞருமான கார்த்திகேயன்.
ஏ.டி.எம் இயந்திரத்தை மையமாக வைத்து பல்வேறு மோசடிகள் நடப்பதாகக் கூறும் கார்த்திகேயன், "அட்டையை நுழைக்கும் இடத்தில் சிறிய அளவிலான ஸ்கிம்மர் இயந்திரத்தைப் பொருத்திவிடுகின்றனர். அது பயனரின் கண்களுக்குத் தெரியாது. அட்டையை நுழைக்கும்போது அதில் உள்ள விவரங்களை ஸ்கேன் செய்துவிடும்" என்கிறார்.
சென்னையில் ஸ்கிம்மர் கருவி மூலம் ஏ.டி.எம் மையங்களில் மோசடியில் ஈடுபட்டதாக பல்வேறு வழக்குகள் பதிவாகியுள்ளன. சென்னை சாந்தோமில் உள்ள ஏ.டி.எம் மையம் ஒன்றில் ஸ்கிம்மர் கருவியைப் பொருத்தியதாக வண்ணாரப்பேட்டையை சேர்ந்த மனோகர் என்ற நபரை 2022-ஆம் ஆண்டு காவல்துறை கைது செய்தது.
சென்னை அயனாவரத்தில் 2019-ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஏ.டி.எம் மையத்தில் பணம் எடுக்கச் சென்ற கோபி கிருஷ்ணா என்பவர், அட்டையை எடுக்கும்போது ஸ்கிம்மர் கருவி கையோடு வந்ததாகக் காவல் நிலையத்தில் அளித்த புகார் மனுவில் கூறியுள்ளார்.
அதே மையத்தில் ரகசிய கேமரா ஒன்று வைக்கப்பட்டிருந்ததும் காவல்துறையின் விசாரணையில் தெரியவந்தது.
ஏ.டி.எம் அட்டையில் உள்ள எண், காலாவதியாகும் ஆண்டு, சி.வி.வி எண் ஆகியவற்றை ஸ்கிம்மர் கருவி பதிவு செய்து கொள்ளும். அதைச் சேகரித்து புதிதாக ஏ.டி.எம் அட்டையைத் (Cloning) தயாரித்து மோசடிகள் தொடர்ந்து நடந்து வந்ததாகவும் கார்த்திகேயன் குறிப்பிட்டார்.
தொடர்ந்து ஏ.டி.எம் மையங்களில் கவனிக்க வேண்டிய அம்சங்களையும் அவர் பட்டியலிட்டார்.
"தவிர, பொதுமக்கள், தங்களின் ஏ.டி.எம் அட்டைகளைப் பயன்படுத்தி பணம் எடுப்பதற்கான வரையறையை (Limit) நிர்ணயித்துக் கொள்ளும் வசதியைப் பயன்படுத்திக் கொள்ளலாம்" எனக் கூறுகிறார், கார்த்திகேயன்.
"இதன் மூலம் ஏ.டி.எம் அட்டையைப் பயன்படுத்தி யாராவது மோசடி செய்தால் கூட நாளொன்றுக்கு 10 ஆயிரம் மட்டுமே எடுக்க முடியும். பணத்தை மோசடியாக எடுப்பது தெரியவந்தால் புகார் தெரிவித்து அட்டையை முடக்கலாம்" என்கிறார் கார்த்திகேயன்.
"ஒருவர், தனது ஏ.டி.எம் அட்டையைப் பயன்படுத்தி பண மோசடி நடந்துள்ளதாக அறிய வந்தால் மூன்று நாட்களுக்குள் வங்கியில் புகார் அளிக்க வேண்டும்" எனக் கூறும் கார்த்திகேயன், "அதன்பேரில் நடவடிக்கை எடுக்காவிட்டால் வங்கியே பொறுப்பு என 2017- ஆம் ஆண்டு ரிசர்வ் வங்கி வெளியிட்ட சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளன" என்கிறார்.
என்ன தண்டனை?"ஏ.டி.எம் அட்டையைப் பயன்படுத்தி மோசடி செய்வது என்பது அடையாள திருட்டாக (Identity theft) பார்க்கப்படுகிறது. இதற்கு தகவல் தொழில்நுட்ப சட்டப் பிரிவு 66 (சி)-யின்படி, மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும்" எனக் கூறுகிறார், கார்த்திகேயன்.
ஒருவரின் தரவுகள் திருடப்படுவதால் தகவல் தொழில்நுட்ப சட்டப் பிரிவு 66 (பி)-ன்படி வழக்குப் பதிவு செய்யப்படுவதால், இதற்கும் மூன்று ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
"இது இணையவழி குற்றமாக பார்க்கப்படுகிறது. மோசடியாக எடுக்கப்படும் பணம், தீவிரவாத செயல்களுக்கு மடை மாற்றப்படும் வாய்ப்பு உள்ளதால், தேசிய இணைய வழி குற்றப் பிரிவின் 1930 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம்" என்கிறார், கார்த்திகேயன்.
"இணைய குற்றப்பிரிவுக்கான இணையதளத்தில் (https://cybercrime.gov.in/) புகாரைப் பதிவு செய்வது அவசியம்" எனவும் அவர் குறிப்பிட்டார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு