கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ஈத்தவிளை பகுதியில் துரைராஜ் என்பவர் வசித்து வந்தார். கொத்தனார் தொழிலாளியான இவர் ஜேசு சவுந்தர்யா என்பவரை கடந்த 6 வருடங்களுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு 2 மகன்களும், 1 மகளும் இருக்கின்றனர். இதையடுத்து துரைராஜ் தன் குடும்பத்துடன் முட்டைக்காடு எனும் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தார். இதற்கிடையில் மனைவி ஜேசு சவுந்தர்யா தனியார் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இதில் மது அருந்தும் பழக்கம் கொண்ட துரைராஜிக்கு மனைவியின் நடத்தை மீது சந்தேகம் ஏற்பட்டு தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.
அதன்படி கடந்த 4ம் தேதி நடந்த தகராறில் மனமுடைந்த ஜேசு சவுந்தர்யா கணவரிடம் கோபித்துக்கொண்டு தாய் வீட்டிற்கு தன் பிள்ளைகளோடு சென்றுவிட்டார். இந்நிலையில் மனைவியின் பிரிவை தாங்க முடியாத துரைராஜ் வீட்டில் யாருமில்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அதனைத் தொடர்ந்து தன் பிள்ளைகளின் பாடப் புத்தகங்களை எடுப்பதற்காக வந்த ஜேசு சவுந்தர்யா கணவர் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். இது தொடர்பாக தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று துரைராஜின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.