உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி: இறுதி போட்டியில் நீரஜ் சோப்ரா!
Seithipunal Tamil September 18, 2025 06:48 PM

உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகின்றன. இதில் இந்தியாவைச் சேர்ந்த 14 ஆண் வீரர்கள், 5 பெண் வீராங்கனைகள் உட்பட மொத்தம் 19 பேர் பங்கேற்றுள்ளனர்.

இன்றைய போட்டிகளில் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் தகுதிச்சுற்று முக்கியத்துவம் பெற்றது. இதில் ஏ பிரிவில் உலக தரம் வாய்ந்த பல நட்சத்திர வீரர்கள் களம் இறங்கினர். அவர்களுடன் இந்தியாவின் நீரஜ் சோப்ராவும் பங்கேற்றார்.

தொடக்கத்திலிருந்தே உற்சாகமாக விளையாடிய நீரஜ் சோப்ரா, தனது முதல் வாய்ப்பிலேயே சிறப்பான சாதனை படைத்தார். இறுதிப்போட்டிக்கு தகுதி பெற குறைந்தது 84.50 மீட்டர் தூரம் ஈட்டி எறிய வேண்டும் என்பதே நிபந்தனை. அதை விட அதிகமாக, 84.85 மீட்டர் தூரத்திற்கு ஈட்டியை எறிந்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.

இந்த சாதனையால் அவர் நேரடியாக உலக தடகள சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார். இதனால் இந்திய அணி மற்றும் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

நீரஜ் சோப்ரா தொடர்ந்து நல்ல நிலையில் விளையாடி வருவதால், இறுதிப்போட்டியிலும் பதக்கம் வெல்லும் வாய்ப்பு அதிகம் என விளையாட்டு வட்டாரங்கள் நம்பிக்கையுடன் கூறுகின்றன.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.