கிருஷ்ணகிரி மாவட்டத்தில், தமிழக வாழ்வுரிமை கட்சியின் ஒன்றிய நிர்வாகி ஒருவர், பட்டப்பகலில் நடுரோட்டில் ஓட ஓட வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. கெலமங்கலம் கிழக்கு ஒன்றியைச் சேர்ந்த தமிழக வாழ்வுரிமை கட்சி பொருளாளர் ரவிசங்கர் (வயது 37), கிருஷ்ணகிரி மாவட்டம் சொங்கோடசிங்கனள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர். கட்சியில் தீவிரமாக செயல்பட்டு வந்த அவர், அதே நேரத்தில் பன்றிகள் வளர்ப்பு மற்றும் விற்பனை தொழிலையும் மேற்கொண்டு வந்தார்.
செவ்வாய்க்கிழமை (இன்று) காலை, ரவிசங்கர் அஞ்சாலம் கிராமம் அருகே உள்ள சாலையில் சென்றுகொண்டிருந்தபோது, மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் அவரை இடைமறித்து திடீரென தாக்கினர். தப்பிக்க முயன்ற ரவிசங்கரை, குறித்த இருவரும் அரிவாள் உள்ளிட்ட கூரிய ஆயுதங்களால் ஓட ஓட விரட்டி, சாலையோரம் சரமாரியாக வெட்டினர். இதனால், ரவிசங்கர் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.
தகவல் அறிந்து வந்த போலீசார், ரவிசங்கரின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விரைந்து செயல்பட்ட போலீசார், இந்த கொலை சம்பவத்தில் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் ஆதி மற்றும் உ ரக்ஷித் ஆகிய இருவரையும் கைது செய்துள்ளனர்.
மேலும் முதற்கட்ட விசாரணையில், தொழிற்துறையில் ஏற்பட்ட போட்டி மற்றும் தனிப்பட்ட விரோதம் காரணமாகவே இந்த கொலை சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என காவல் துறை தகவல்கள் தெரிவிக்கின்றன. கைது செய்யப்பட்ட இருவரிடமும் போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பட்டப்பகலில், ஒரு கட்சி நிர்வாகி நடுரோட்டில் ஓட ஓட வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.