கோயில் யானை விவகாரம்: "அம்பானியின் வந்தாரா சரணாலயத்திற்கு மாற்றுவதில் தவறில்லை" - சுப்ரீம் கோர்ட்
Vikatan September 18, 2025 08:48 PM

ஆசியாவின் மிகப் பெரிய பணக்காரரான தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி குஜராத்தில் நடத்தும் வந்தாரா விலங்கியல் பூங்காவில், நூற்றுக்கணக்கான யானைகள், புலிகள் மற்றும் பிற விலங்குகள் உள்ளன.

குஜராத்தில் உள்ள ஜாம்நகரில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் பெட்ரோலிய சுத்திகரிப்பு மைய வளாகத்திற்குள் 3,500 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்திருக்கும் வந்தாரா, சுமார் 2,000 உயிரினங்களுக்குத் தாயகமாக இருக்கிறது.

உலகின் மிகப்பெரிய வனவிலங்கு மறுவாழ்வு மையமாகக் கருதப்படும் வந்தாரா விலங்கியல் பூங்கா, கடந்த ஆண்டுதான் திறந்து வைக்கப்பட்டது. இதனை பிரதமர் நரேந்திர மோடி கூட பார்வையிட்டார்.

இந்தத் தனியார் விலங்குகள் சரணாலயத்திற்குத் தேவையான விலங்குகள் சட்டவிரோதமாக பணம் கொடுத்து வாங்கப்படுவதாகவும், வனவிலங்குகள் பாதுகாப்புச் சட்டம் மற்றும் சர்வதேச விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

வந்தாரா விலங்கியல் பூங்கா

அதோடு கோயில் யானைகளும் இந்தச் சரணாலயத்திற்கு இடமாற்றம் செய்யப்படுகின்றன. மகாராஷ்டிராவில் உள்ள ஒரு கோயில் யானை அம்பானியின் ரிலையன்ஸ் பவுண்டேசன் வந்தாராவில் விலங்குகள் நல்வாழ்வு மற்றும் சரணாலயத்திற்கு அனுப்பப்பட்டது சர்ச்சையைக் கிளப்பியது.

இந்நிலையில் கோயில் யானைகளை குஜராத் அம்பானியின் விலங்குகள் சரணாலயத்திற்கு இடமாற்றம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து சுப்ரீம் கோர்ட்டில் பொதுநலன் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இம்மனு சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்த போது இக்குற்றச்சாட்டு குறித்து விசாரிக்க முன்னாள் நீதிபதி தலைமையில் நான்கு பேர் கொண்ட சிறப்பு விசாரணைக்குழுவை சுப்ரீம் கோர்ட் நியமித்தது.

இந்த விசாரணைக்குழு வந்தாரா விலங்குகள் சரணாலயத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்து தனது அறிக்கையை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ளது.

இந்த விசாரணை கமிட்டி, வந்தாராவில் விலங்குகளை வாங்குவது மற்றும் விலங்குகளின் நலன் தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரித்தது. யானைகள் சட்டவிரோதமாக வாங்கப்பட்டதா என்பது குறித்தும், விலங்குகளின் தரம் முறையாகப் பராமரிக்கப்படுகிறதா என்பது குறித்தும், இதில் பணமுறைகேடு எதுவும் நடக்கிறதா என்பது குறித்தும் விசாரித்தது.

அம்பானி மகனுக்காக வளைந்த சட்டங்கள்... `வந்தாரா’ விலங்குகள் நல மையத்தை வட்டமடிக்கும் சர்ச்சைகள்!

வந்தாராவின் சுற்றுச்சூழல், கால்நடை பராமரிப்பு மற்றும் நிதி நடைமுறைகளின் பொருத்தத்தை மதிப்பிடுவதும் இந்தக் குழுவின் பணியாகும். வந்தாரா மற்றும் ஆனந்த் அம்பானி சார்பாக சுப்ரீம் கோர்ட்டில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே, சர்வதேச விலங்குகள் நல ஆர்வலர்கள் எழுப்பிய விமர்சனங்கள் பற்றிக் குறிப்பிட்ட அவர், "விலங்குகளை வேட்டையாடும் நாடுகளில் இருந்துதான் இது போன்ற விமர்சனங்கள், எதிர்ப்புகள் வருகிறது.

இந்தியா விலங்குகளுக்கு நல்லதுதான் செய்து வருகிறது. ரிலையன்ஸ் பவுண்டேசன் வனவிலங்கு சரணாலயம், உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட குழுவுடன் விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைப்பு கொடுத்து வருகிறது. விசாரணைக்கு ரிலையன்ஸ் பவுண்டேசன் விலங்குகள் சரணாலய ஊழியர்கள் தயாராக இருக்கின்றனர்.

விசாரணை அறிக்கையில் தனியுரிமை மற்றும் ரகசிய விவரங்கள் உள்ளன. அவற்றைப் பகிரங்கமாக வெளியிடக்கூடாது" என்று அவர் கேட்டுக்கொண்டார்.

மகாதேவி யானை, வந்தாரா, அம்பானி

இதையடுத்து தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள், "விசாரிக்க நியமிக்கப்பட்ட குழு தனது அறிக்கையைத் தாக்கல் செய்துள்ளது. வந்தாராவில் விலங்குகள் பராமரிக்கப்படும் முறை திருப்தியளிக்கும் விதமாக இருக்கிறது. முறைப்படியான நடைமுறைகள் பின்பற்றப்படும் வரை வந்தாரா வனத்துறையிடமிருந்து அல்லது கோயில்களிலிருந்து யானைகளை எடுத்துக்கொள்வதில் எந்தத் தவறும் இல்லை.

விசாரணை அறிக்கையை நாங்கள் பரிசீலிப்போம், ஏதேனும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றால், நாங்கள் உத்தரவு பிறப்பிப்போம். நாங்கள் இதுவரை வேண்டுமென்றே அறிக்கையைத் திறக்கவில்லை; குழு தனது பணியை உடனடியாகச் செய்துள்ளது. அதைப் பாராட்டுகிறோம்" என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

Vantara: கோவில் யானை அம்பானியின் வந்தாரா பூங்காவிற்கு மாற்றம்; மகாராஷ்டிராவில் வெடிக்கும் போராட்டம்! Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk
© Copyright @2025 LIDEA. All Rights Reserved.