Sydney Sweeney: பாலிவுட்டில் நடிக்க ரூ.530 கோடி? ஷாக்கான ஹாலிவுட் நடிகை சிட்னி ஸ்வீனி; பின்னணி என்ன?
Vikatan September 19, 2025 12:48 AM

பாலிவுட் தயாரிப்பாளர்கள் இப்போது தயாரிக்கும் படங்களுக்கான செலவு ரூ.100 கோடியைத் தாண்டித்தான் இருக்கின்றன. அதுவும் பிரபல ஹீரோ நடிக்கும் படம் என்றால் பட்ஜெட் மேலும் அதிகரிக்கிறது. பாலிவுட்டில் இது வரை பெரிய அளவில் ஹாலிவுட் நடிகைகள் யாரும் நடிக்கவில்லை. ஆனால் பாலிவுட் நடிகைகள் பிரியங்கா சோப்ரா, ஆலியா பட் போன்ற நடிகைகள் ஹாலிவுட்டில் நடித்து வருகின்றனர்.

பாலிவுட்டில் மிகவும் பிரமாண்ட பட்ஜெட்டில் புதிய படம் ஒன்று தயாரிக்கப்பட இருக்கிறது. இப்படத்தை சர்வதேச தரத்திற்குக் கொண்டு செல்ல அத்தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இப்படத்தில் ஹாலிவுட் நடிகை ஒருவர் ஹீரோயினாக நடித்தால் நன்றாக இருக்கும் என்று அந்நிறுவனம் கருதி அதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது. ஹாலிவுட்டில் வளர்ந்து வரும் 28 வயதாகும் இளம் நடிகை சிட்னி ஸ்வீனியை இப்படத்தில் நடிக்க வைக்க பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் திட்டமிட்டு இருக்கிறார்.

சிட்னி ஸ்வீனி

இதற்காக சிட்னி ஸ்வீனியிடம் தயாரிப்பாளர் தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. தங்களது படத்திற்கு சர்வதேச அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்பதற்காக படத்தில் நடிக்க ரூ.530 கோடி சம்பளமாகத் தருவதாகச் சொல்லி இருக்கிறார்கள்

இந்தத் தொகையைக் கேட்டவுடன் சிட்னி ஸ்வீனி அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைந்துள்ளார். அவரைப் பொருத்தவரை அந்தத் தொகை மிகவும் பெரியது ஆகும். ரூ.530 கோடியில் ரூ.415 கோடி படத்தில் நடிப்பதற்கான கட்டணமாகவும், ரூ.115 கோடி ஸ்பான்ஷர்சிப் ஒப்பந்தம் மூலமும் ஏற்பாடு செய்து கொடுப்பதாகச் சொல்லி இருக்கிறார்கள்.

அதனைக் கேட்டு சிட்னி ஸ்வீனி உடனே படத்தில் நடிக்க ஒப்புக்கொள்ள வில்லை. அவருக்கு ஏற்கனவே ஹாலிவுட்டில் வரிசையாக படங்கள் இருக்கின்றன. அந்தப் படங்களை ஒதுக்கி வைத்துவிட்டுத்தான் பாலிவுட் படத்தில் நடிக்க வேண்டியிருக்கும்.

எனவே பாலிவுட் படத்தில் நடிப்பதா வேண்டாமா என்பது குறித்து சிட்னி ஸ்வீனி பரிசீலித்து வருகிறார். பாலிவுட் சினிமா வேகமாக வளர்ந்து வந்து கொண்டிருக்கிறது. அதில் நடிப்பதன் மூலம் சிட்னி ஸ்வீனியின் புகழ் மேலும் அதிகரிக்கும். ரூ.530 கோடி தருவதாகச் சொன்ன தயாரிப்பாளர், படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தொடங்கும் என்றும், படப்பிடிப்பு நியுயார்க், பாரீஸ், லண்டன், துபாய் போன்ற நகரங்களில் நடக்க இருக்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.

படத்தின் கதை அமெரிக்க நட்சத்திரமான சிட்னி ஸ்வீனி இந்தியப் பிரபலம் ஒருவரைக் காதலிப்பது போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. சிட்னி ஸ்வீனி டிவி சீரியஸான யூபோரியாவில் நடித்து மிகவும் புகழ் பெற்றவர். அதன் பிறகு ஹாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார். தற்போது அவர் நடித்துள்ள ஹவுஸ்மெய்டு படம் விரைவில் வெளியாக இருக்கிறது.

"பாகுபலி போன்ற வரலாற்றுப் படங்களில் நடிக்க ஆசை; எனக்குப் பிடித்த ஹாலிவுட் படங்கள் இவைதான்"-நாகர்ஜுனா

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.