#BIG NEWS: இவர்களுக்கு உரிமைத் தொகை கிடையாது... அமைச்சர் கீதா ஜீவன்!
Top Tamil News September 19, 2025 01:48 AM

தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதா ஜீவன் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் ஆண்டு வருமானம் 2.50 லட்சத்துக்கு கீழ் இருப்பவர்களுக்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதில், தகுதியின் அடிப்படையில் இந்த தொகை வழங்கப்படுகிறது. சுமார் 1.15 கோடி பெண்கள் மாதம் தோறும் மகளிர் உரிமைத் தொகை பெற்று வருகின்றனர். இந்த தொகையானது வருமான வரி செலுத்தாதவர்கள், ஆண்டு வருமானம் 2 லட்சத்துக்கு கீழ் இருப்பவர்கள் என்பன உள்ளிட்ட தகுதியின் அடிப்படையில் வழங்கப்படுகிறது.

மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளின் திட்டங்களுக்கு தகுதி என்பது அவசியம் தேவை. அந்த தகுதி இல்லாமல் அரசின் பணத்தை அனைவருக்கும் எடுத்துக் கொடுக்க முடியாது. உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்களுக்கும் மகளிர் உரிமைத் தொகை நிச்சயம் வழங்கப்படும். நேர்மையாக ஆட்சி நடத்தி வரும் திமுக அரசு மீது குற்றம் சுமத்த முடியாத காரணத்தால் எதிர்க்கட்சிகள் வேண்டுமென்றே வாரிசு அரசியல் என்று குற்றம் சுமத்துகின்றனர். எனது சகோதரர் ஜெகன் பெரியசாமி கவுன்சிலராக போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதன் பின்னர் அவருக்கு தூத்துக்குடி மேயராக பதவி வழங்கப்படலாம் என்று மற்ற கவுன்சிலர்கள் கட்சித் தலைமைக்கு தகவல் தெரிவித்தனர். அதன் அடிப்படையிலும், ஜனநாயக முறைப்படியும் அவர் தூத்துக்குடி மேயராக பதவி வகித்து வருகிறார். இதில் வாரிசு அரசியல் என்ற பேச்சுக்கு இடமில்லை.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீராக உள்ளது. கடந்த 2021 இல் திமுக ஆட்சி அமைந்த உடனே தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை பேணிக் காப்பதுடன், சட்டத்தை முறையாக அமல்படுத்த வேண்டும் என்று எங்கள் அனைவருக்கும் முதல்வர் அறிவுறுத்தல் வழங்கினார். அதன் அடிப்படையிலும், நாங்கள் மேற்கொண்ட நடவடிக்கையின்படியும், தற்போது பெண்களுக்கு எதிராக நடக்கும் நிகழ்வுகள் குறித்து அந்த பெண்கள் அளிக்கும் புகார்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் குற்றச்செயல்கள் அதிகரிப்பதாக கூறுவதை என்னால் ஏற்க முடியாது.

தமிழகம் முழுவதும் திமுகவின் கழக பணி இருக்க வேண்டும். தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்பதே முதல்வர் மு க ஸ்டாலின் நோக்கமாகும். இதற்காக, தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்ட செயலாளர்களும் தங்களது மாவட்டத்தில் கட்சி நிகழ்ச்சி நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதில், கரூர் மாவட்ட செயலாளர் செந்தில் பாலாஜியும் கோரிக்கை விடுத்திருந்தார். அதன் அடிப்படையிலேயே கரூர் மாவட்டத்தில் திமுக முப்பெரும் விழா நடத்துவதற்கு திமுக வாய்ப்பளித்தது.

இந்த விவகாரத்தில் மேற்கு மண்டலத்தில் திமுகவை வலுப்படுத்த வேண்டும் என்பதற்காக திமுக முப்பெரும் விழாவை நடத்தவில்லை. அனைத்து மண்டலங்களும் முக்கியமாகும். தமிழகத்தில் எல்லோருக்கும் எல்லாம் என்பதன் அடிப்படையில் ஒட்டு மொத்த வளர்ச்சி. உள்ளடக்கிய வளர்ச்சி என்பது அடிப்படையில் முதல்வர் செயல்பட்டு வருகிறார் என்று தெரிவித்தார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.