இனி அவரை 'முகமூடியார் பழனிசாமி' என்று அழைக்க வேண்டும் - டிடிவி தினகரன்!
Seithipunal Tamil September 19, 2025 03:48 AM

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், எடப்பாடி பழனிசாமி டெல்லியில் அமித் ஷாவை சந்தித்த விவகாரம் குறித்து கடுமையாக விமர்சித்துள்ளார்.

இதுகுறித்த அவரின் பேட்டியில், அண்ணா பிறந்தநாள் கூட்டத்தில் பழனிசாமி வீர வசனம் பேசியதாகவும், தன்மானம் முக்கியம் என்று கூறியதாகவும், ஆனால் அதற்கே முரணான செயல்களில் ஈடுபடுவதாகவும் குற்றம்சாட்டினார்.

அவர் மேலும், தனது பயணம் தள்ளி வைக்கப்பட்டது குறித்து வெளிவந்த செய்திகளை பொய்யாக்கி, வானிலையை காரணம் காட்டியதாக பழனிசாமியை குற்றம்சாட்டினார். உண்மையில், அமித் ஷா அழைத்ததால் பழனிசாமி டெல்லி சென்றதாக ஊடகங்களில் செய்திகள் வந்துள்ள நிலையில், இதை மறுத்து ஏமாற்ற முயல்வது ஏற்க முடியாதது எனவும் தெரிவித்தார்.

அமித் ஷாவை சந்தித்த பின் முகம் மறைத்தபடி காரில் வெளியேறிய பழனிசாமியின் காட்சியை சுட்டிக்காட்டி, இனி அவரை ‘முகமூடியார் பழனிசாமி’ என்று அழைக்க வேண்டும் என தினகரன் பரிகாசமாக கூறினார். பழனிசாமி சொல்வது அனைத்தும் பொய்யாகும், அவர் செய்வது துரோகம், ஆனால் சிலர் அதை ராஜதந்திரம் என பெயர் சூட்டுவதாகவும் தினகரன் விமர்சித்தார்.

மேலும், முன்னாள் தலைவர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா வெற்றிகொண்ட இரட்டை இலை சின்னத்தை வைத்துக்கொண்டு, தமிழக மக்களை ஏமாற்ற முயற்சி செய்வதாக பழனிசாமியை குற்றம்சாட்டினார். பண பலமும், படை பலமும் இருந்தாலும், வரவிருக்கும் தேர்தலில் பழனிசாமி தோல்வியடைவது உறுதி எனவும் தெரிவித்தார்.

அமித் ஷாவை சந்தித்த பின் முகம் மறைத்தபடி வெளியேறிய காட்சி இணையத்தில் வைரலாகியது குறிப்பிடத்தக்கது.
 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.