சென்னையிலிருந்து புறப்பட்டு பெங்களூருவை நோக்கி சுமார் 25 பயணிகளை ஏற்றிக்கொண்டு வந்த ஒரு ஆம்னி பேருந்து, திடீரென உயிர்காக்கும் திகில் காட்சியை ஏற்படுத்தியது.
அந்த பேருந்து பள்ளிகொண்டா அருகே தேசிய நெடுஞ்சாலையில் வேகமாக சென்று கொண்டிருக்கும்போது, பேருந்தின் உள்ளிருந்து திடீரென புகை பறக்கத் தொடங்கியது.
இதைக் கண்ட பயணிகள் அதிர்ச்சியில் கதறினர்.இதன் ஓட்டுநர் சாலையின் ஓரமாக நிறுத்த, உயிர் பிழைக்க வேண்டும் என்ற பீதியில் அனைவரும் அலறிக்கொண்டு அவசரமாக பேருந்திலிருந்து வெளியே பாய்ந்தனர்.
அந்த சில நொடிகளிலேயே,பேருந்து முழுவதும் மளமளவென தீப்பிடித்து எரியத் தொடங்கியது. அக்காட்சி அனைவரையும் உலுக்கியது. மேலும், உயிர் பிழைத்த பயணிகள் சற்றும் தவறியிருந்தால் எரிந்த சாம்பலாகி இருப்போம் என நடுங்கினர்.
இந்த தகவலை அறிந்த தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். ஆனாலும் பேருந்து முழுவதும் சிதைந்து சாம்பலானது.
இந்த திடீர் தீ விபத்து காரணமாக தேசிய நெடுஞ்சாலையில், சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேல் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வாகனங்கள் நீண்ட வரிசையில் சிக்கிக் கொண்டன.மேலும், சம்பவம் நடந்த பகுதி முழுவதும் பரபரப்புடன் கூடிய பதற்ற சூழ்நிலை நிலவியது.