கன்னியாகுமரி மாவட்டம், திருவட்டார் அருகே வியனூர் பகுதியைச் சேர்ந்த பிரின்ஸ், டெம்போ ஓட்டுநராக பணிபுரிகிறார். அவரது மனைவி மஞ்சு, தனியார் மருத்துவமனையில் செவிலியராக வேலை செய்கிறார்.
இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். ஆனால், வரதட்சணை கேட்டு மாமியார் அல்போன்சா, மஞ்சுவிடம் அடிக்கடி தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று மது போதையில் வீட்டிற்கு வந்த கணவர் பிரின்ஸை மஞ்சு கண்டித்ததால், மாமியார் அல்போன்சா ஆத்திரமடைந்து, மருமகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இதன்போது, கொடூரமாக கல்லால் தலையில் தாக்கியதுடன், மஞ்சுவின் காதை கடித்து துண்டாக்கிய சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொடூர தாக்குதலில் படுகாயமடைந்த மஞ்சுவை, அக்கம்பக்கத்தினர் உடனடியாக பத்மநாபபுரம் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
பின்னர், மேல் சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
மஞ்சு அளித்த புகாரின் அடிப்படையில், திருவட்டார் காவல்துறையினர் மாமியார் அல்போன்சா மீது வழக்கு பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வரதட்சணை கேட்டு மருமகளை துன்புறுத்தி, காதை துண்டாக்கிய இந்த பயங்கர சம்பவம், கன்னியாகுமரி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.