செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சோமங்கலம் பகுதியை சேர்ந்தவர் தான் ராஜ்குமார்-மங்கை தம்பதியினர். இதில் ராஜ்குமார் கொத்தனாராக வேலை பார்த்து வருகிறார். இந்த தம்பதியினருக்கு திருமணமாகி 3 பெண் குழந்தைகள் மற்றும் 2 ஆண் குழந்தைகள் இருக்கின்றனர். தற்போது 6வது முறையாக கர்ப்பமாக இருந்த மங்கை பிரசவத்திற்காக தாம்பரம் சானடோரியத்தில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து அவருக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்தது.
அதன்பின் மருத்துவர்கள் 6 குழந்தை பிறந்த நிலையில் கருத்தடைக்கான அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மங்கையிடம் தெரிவித்தனர். இதனால் பயந்துபோன மங்கை பிறந்த குழந்தையை மருத்துவமனையில் தவிக்கவிட்டு திடீரென காணாமல் போனார். இது தொடர்பான புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து மங்கையை தேடி வந்தனர்.
இந்நிலையில் அவர் சோமங்கலத்திலுள்ள தனது வீட்டிற்கு வந்து சேர்ந்தார். அதனைதொடர்ந்து காவல்துறையினர் மங்கையை நேரில் வரவழைத்து விசாரணை மேற்கொண்டனர். அதோடு மருத்துவர்கள் 6வதாக பிறந்த குழந்தையை மங்கையிடம் ஒப்படைத்தனர். இவ்வாறு பச்சிளம் குழந்தையை தாய் ஆஸ்பத்திரியில் விட்டு சென்ற சம்பவமானது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.