செங்கல்பட்டு மாவட்டம், சோமங்கலத்தைச் சேர்ந்த 31 வயது மங்கை, கொத்தனாராக பணிபுரியும் ராஜ்குமாரின் மனைவி. 15 ஆண்டு திருமண வாழ்க்கையில், இவர்களுக்கு மூன்று பெண் குழந்தைகள், இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர்.
ஆறாவது முறையாக கர்ப்பமான மங்கை, தாம்பரம் மாவட்ட தலைமை மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டு, ஆண் குழந்தையை பெற்றெடுத்தார்.
ஆனால், ஆறு குழந்தைகள் பிறந்த பிறகு குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியதும், “அறுவை சிகிச்சை என்றாலே பயம்” எனக் கூறி, மங்கை மருத்துவமனையை விட்டு திடீரென மாயமானார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மங்கை மருத்துவமனையில் இருந்து தப்பியதால், புதிதாகப் பிறந்த குழந்தை தாய்ப்பால் இன்றி அழுது தவித்தது. மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் மங்கையை தேடியும் கிடைக்காததால், தகவல் பரவியது.
மாலையில் மங்கை தனது சோமங்கலம் வீட்டிற்கு திரும்பியதை அறிந்த கணவர் ராஜ்குமார், உடனடியாக தாம்பரம் காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தார். காவல்துறையினர் மங்கையிடம் விசாரித்தபோது, அறுவை சிகிச்சைக்கு பயந்து தப்பியதாக ஒப்புக்கொண்டார்.
இதனிடையே, மருத்துவமனையில் குழந்தையை பாதுகாத்து வந்த மருத்துவர்கள், மங்கை வீடு திரும்பியதை அறிந்து, குழந்தையை டிஸ்சார்ஜ் செய்து அவரிடம் ஒப்படைத்தனர்.
ஆறு குழந்தைகள் பெற்றும் குடும்பக் கட்டுப்பாட்டை தவிர்த்து, பயத்தில் குழந்தையை தவிக்க விட்டு சென்ற மங்கையின் செயல், சென்னை மக்களிடையே பேசுபொருளாக மாறியுள்ளது.