அமெரிக்காவை சேர்ந்த பெண் ஒருவர் இந்தியா வந்தபோது கூலிப்படையால் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் வாஷிங்டன் பகுதியை சேர்ந்தவர் ருபிந்தர் கவுர் பாந்தர். 71 வயதாகும் ருபிந்தர் கணவரை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்துள்ளார். இவருக்கு டேட்டிங் செயலி ஒன்றின் மூலம் இங்கிலாந்தில் வாழ்ந்து வந்த இந்தியரான 75 வயதான சரஞ்சித் சிங் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியுள்ளது.
அதை தொடர்ந்து இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்த நிலையில், திருமணத்தை பஞ்சாப்பில் உள்ள தனது சொந்த ஊரில் வைத்துக் கொள்ளலாம் என ருபிந்தரை இந்தியாவிற்கு வர அழைத்துள்ளார் சரஞ்சித் சிங். அதன்பிறகு ருபிந்தர் என்னவானார் என்பது தெரியவில்லை. இதுகுறித்து ருபிந்தரின் சகோதரர் டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் புகார் அளித்துள்ளார்.
அதன்பேரில் காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட நிலையில் சரஞ்சித் சிங் மாயமானார். ஆனால் அவரது அலைப்பேசி பதிவுகளை சோதித்தபோது, சுக்ஜீத் சிங் என்பவருக்கு அடிக்கடி பேசியது தெரியவந்துள்ளது. அதை தொடர்ந்து சுக்ஜீத் சிங்கை பிடித்து விசாரித்ததில், ருபிந்தரை கொல்வதற்காக சரஞ்சித் சிங் தன்னை கூலிப்படையாக அமர்த்தியதாகவும், தான் ருபிந்தரை கொன்று எரித்துவிட்டதாகவும் கூறியுள்ளார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் தலைமறைவான சரஞ்சித் சிங்கை போலீஸார் தேடி வருகின்றனர்.
Edit by Prasanth.K