உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதான அஞ்சலி, கணவரை விட்டு பிரிந்து ராஜஸ்தானின் அஜ்மீரில் வசித்து வந்தார். அவருக்கு மூன்று வயது மகள் இருந்தார். அங்கு உள்ள ஒரு ஓட்டலில் வரவேற்பாளராக பணியாற்றிய அஞ்சலி, அதே இடத்தில் வேலை செய்த அல்கேஷுடன் பழகினார். பழக்கம் பின்னர் காதலாகி, இருவரும் ஒன்றாக வசிக்கத் தொடங்கினர். அஞ்சலியின் மகளும் அவர்களுடன் இருந்தார்.
ஆனால் குழந்தையை அல்கேஷ் விரும்பவில்லை எனத் தெரிய வந்தது. அவளை கேலி செய்தும், அஞ்சலியையும் அவமதித்தும் வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனஅழுத்தத்தில் சிக்கிய அஞ்சலி, தனது மகளைக் கொல்ல முடிவு செய்தார்.
ஒரு நாள், குழந்தையை தாலாட்டு பாடி தூங்க வைத்தார். பின்னர் தோளில் தூக்கிக்கொண்டு அருகிலிருந்த ஏரிக்குச் சென்று, சிறிதும் தயங்காமல் தண்ணீரில் தூக்கி வீசினார்.
அதன்பின், நடுவிரவில் மகள் காணாமல் போனதாகக் காட்டி, சாலையில் அழுது தேடும் நாடகமாடினார். இதனால் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. விசாரணையில் அஞ்சலி உண்மையை ஒப்புக்கொண்டார். தனது காதலருடன் வாழ்வதற்காக மகளை கொன்றதாக தெரிவித்துள்ளார்.
இதையடுத்து போலீசார் அஞ்சலியை கைது செய்து கொலை வழக்குப் பதிவு செய்தனர். குழந்தை காணாமல் போனபோது, அல்கேஷும் தேடலில் இணைந்திருந்தார். எனவே, அவருக்கும் குற்றத்தில் தொடர்பு உள்ளதா என போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.