மீண்டும் திமுக ஆட்சி அமைத்தால், ஆட்சியில் பங்கு கேட்போம் என முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி பரபரப்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். சிதம்பரம் நகரில் செய்தியாளர்களை சந்தித்தபோது அவர் இந்த கருத்தை தெரிவித்தார்.
வரும் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணியில் தொடரும் என்றும், அதேநேரத்தில் கடந்த தேர்தலைவிட அதிக எண்ணிக்கையிலான தொகுதிகளை பெற்றுக்கொள்வோம் என்றும் கே.எஸ். அழகிரி கூறினார். மேலும், திமுக கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வந்தால், ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்போம் என்றும் அவர் திட்டவட்டமாக தெரிவித்தார்.
ஏற்கனவே, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், இதேபோன்ற கோரிக்கையை முன்வைத்திருக்கும் நிலையில், தற்போது கே.எஸ். அழகிரியும் அதே நிலைப்பாட்டை எடுத்திருப்பது அரசியல் வட்டாரத்தில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த அறிவிப்புகள், புதிதாக கட்சி தொடங்கியுள்ள நடிகர் விஜய், தங்கள் கூட்டணிக்கு வந்தால் ஆட்சிப் பங்களிப்பு வழங்கப்படும் என ஏற்கெனவே கூறியிருப்பதால், திராவிட கட்சிகளுக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டிருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த சூழல், திமுக கூட்டணியில் எதிர்காலத்தில் என்ன மாதிரியான மாற்றங்கள் நிகழும் என்ற எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
Edited by Mahendran