மயிலாடுதுறையில் வாலிபர் கொல்லப்பட்ட வழக்கில் பெண்ணின் தாய் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை அருகே அடியமங்கலத்தைச் சேர்ந்தவர் வைரமுத்து. மோட்டார் சைக்கிள் மெக்கானிக்கான இவர் நேற்று முன்தினம் வேலையை முடித்துவிட்டு இரவு வீடு திரும்பியபோது வைரமுத்துவை வழி மறித்த சிலர் தாங்கள் வைத்து இருந்த அரிவாளால் அவரை சரமாரியாக வெட்டினர். இதில் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் கிடந்த வைரமுத்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதையடுத்து நடந்த போலீஸ் விசாரணையில்,வைரமுத்து அதே ஊரைச் சேர்ந்த ஒரு பெண்ணை கடந்த 10 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். பெண்ணின் குடும்பத்தினர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் அந்த பெண், காதலனுடன் மட்டுமே வாழ விருப்பம் என்றும், அவரை பதிவு திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் தனது குடும்பத்தினரிடம் தெரிவித்து வந்துள்ளார்.
இந்த நிலையில் அந்த பெண்ணின் சகோதரர்களும், அவரது கூட்டாளிகளும் சேர்ந்து வைரமுத்துவை நேற்று முன்தினம் இரவு அரிவாளால் வெட்டி கொலை செய்துள்ளது தெரிய வந்தது.
இந்த படுகொலை சம்பவம் தொடர்பாக இறந்த வைரமுத்துவின் தாயார் ராஜலட்சுமி அளித்த புகாரின்பேரில் மயிலாடுதுறை போலீசார், பெண்ணின் சகோதரர்களான குணால், குகன், சித்தப்பா பாஸ்கர், உறவினர்கள் சுபாஷ், கவியரசன், அன்புநிதி ஆகிய 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து 5 பேரையு கைது செய்தனர். தலைமறைவான குணாலை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.
இருதரப்பும் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள் என்றபோதிலும், பெண்ணின் தாயார் மாற்று சமுதாயத்தை சேர்ந்தவர் என்பதால், இந்த கொலை சம்பவத்துக்கு தூண்டுதலாக இருந்த அந்த பெண்ணின் தாயார் விஜயா மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் 3 பேரை போலீசார் விடுவித்துள்ளனர்.
பெண்ணின் தாய் விஜயா மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்குப்பதிய வைரமுத்துவின் உறவினர்கள் வலியுறுத்தி வந்தநிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.