ஆன்மீகம் : திருப்பதி சலகட்ல பிரம்மோற்சவம் 2025 முழு விபரங்கள் இதோ..!
Top Tamil News September 19, 2025 05:48 AM

திருப்பதியில் பெருமாள் வழிபாட்டிற்குரிய புரட்டாசி மாதத்தில் நடைபெறும் சலகட்ல பிரம்மோற்சவ விழா ஒன்பது நாட்கள் நடக்கும் உற்சவமாகும். இந்த ஆண்டு செப்டம்பர் 23ம் தேதியன்று மாலை அங்குரார்ப்பணத்துடன் இது துவங்க உள்ளது.

பிரம்மோற்சவத்திற்கு முன்பு நடைபெறும் கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் செப்டம்பர் 16ம் தேதி, அதாவது பிரம்மோற்சவம் துவங்குவதற்கு முந்தைய செவ்வாய்கிழமையில் நடைபெறும். பிரம்மோற்சவத்தின் அனைத்து நாட்களிலும் உற்சவமூர்த்தியான மலையப்ப சுவாமி, ஸ்ரீதேவி-பூதேவி தாயாருடன் காலையிலும், மாலையிலும் திருமலையின் நான்கு மாட வீதிகளிலும் உலா வந்து அருள்பாலிப்பார். காலை 8 முதல் 10 மணி வரையிலும், மாலையில் 7 மணி முதல் 9 மணி வரையிலும் வாகன சேவை, பிரம்மோற்சவத்தின் அனைத்து நாட்களிலும் நடைபெறும்.

வாகன சேவை விபரம் :

  • செப்டம்பர் 24 - மாலை கொடியேற்றம்
  • செப்டம்பர் 25 - காலை சின்ன சேஷ வாகனம், மாலை ஹம்ச வாகனம்
  • செப்டம்பர் 26 - காலை சிம்ம வாகனம், மாலை முத்யாபு பண்டரி வாகனம்
  • செப்டம்பர் 27 - காலை கற்பவிருட்ச வாகனம், மாலை சர்வ பூபால வாகனம்
  • செப்டம்பர் 28 - மோகினி அவதாரம், மாலை கருட வாகனம்
  • செப்டம்பர் 29 - ஹனுமந்த வாகனம், மாலை தங்க ரதம், இரவு கஜ வாகனம்
  • செப்டம்பர் 30 - காலை சூரிய பிரபை வாகனம், மாலை சந்திர பிரபை வாகனம்
  • அக்டோபர் 01 - காலை ரத உற்சவம், மாலை அஸ்வ வாகனம்
  • அக்டோபர் 02 - சக்ர ஸ்நானனம், அன்று இரவு கொடியிறக்கம்


பொதுவாக புரட்டாசி மாதத்தில் அனைத்து பெருமாள் கோவில்களிலும் பக்தர்கள் கூட்டம் அலை மோதும். அப்படி இருக்கையில் கலியுக வைகுண்டம் என போற்றப்படும் திருமலை திருப்பதியில் பக்தர்கள் கூட்டத்தை சொல்லவா வேண்டும். அதிலும் புண்ணியம் சேர்க்கும் புரட்டாசி மாதத்தில் நடக்கும் பிரம்மோற்சவத்தில் கலந்து கொள்வது எத்தனை பெரிய பாக்கியம். இதில் வழக்கத்தை விட மிக அதிகமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். திருப்பதியில் புரட்டாசி சலகட்ல பிரம்மோற்சவம் நடைபெறும் ஒன்பது நாட்களும் லட்சக்கணக்கான பக்தர்கள் கூட்டம் அலைமோதும். திருப்பதி பிரம்மோற்சவத்தில் கலந்து கொள்ளும் பக்தர்கள் வாகன சேவை நேரங்களை கணக்கிட்டு, தரிசன நேரத்தை திட்டமிட்டுக் கொள்ளலாம். இதனால் பெருமாளின் தரிசனத்தையும், அருளையும் பெற முடியும்.

திருப்பதியில் பிரம்மோற்சவம் நடைபெறும் சமயத்தில் நவராத்திரி காலமும் துவங்கி விடும். இதனால் பெருமாளை மோகினி அலங்காரம் உள்ளிட்ட அலங்காரங்களிலும் தரிசிக்க முடியும். இது பிரம்ம தேவரே நடத்தும் உற்சவமாக கருதப்படுவதால் ஏழுமலையானின் அருளை பெறுவதற்கு மிகவும் ஏற்ற காலமாகும்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.