புரட்டாசி மாத பிரதோஷம்.. சிவன் கோவில்களில் குவிந்த பக்தர்கள்!
Seithipunal Tamil September 20, 2025 10:48 AM

புரட்டாசி மாத பிரதோஷத்தை முன்னிட்டு  சிவன் கோவில்களில் நடைபெற்ற அபிஷேக ஆராதனைகளில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா திருவலம் வில்வநாதீஸ்வரர் கோவிலில் பிரதோஷ தினத்தை முன்னிட்டு, நந்தி பகவானுக்கு  அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. 

இதேபோல திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் தெய்வநாயகி உடனமர் சோளீஸ்வர சுவாமி கோவில், அல்லியங்கோதை உடனமர் புற்றிடம் கொண்டீஸ்வரர் கோவில், வள்ளியரச்சல் மாந்தீஸ்வரர் கோவில், மயில் ரங்கம் தையல்நாயகி உடனமர் வைத்தியநாதேஸ்வரர் கோவில், மங்கலப்பட்டி பாண்டீஸ்வரர் கோவில் ஆகிய கோவில்களில் காலை முதல் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

சிவபெருமானுக்கும் நந்திக்கும் பால், தயிர், தேன், பஞ்சாமிர்தம், கனிகள், மலர்கள், விபூதி, மஞ்சள், சந்தனம், பன்னீர், இளநீர் என பல்வேறு திரவியங்களால் அபிஷேகமும் தீபாராதனையும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். முடிவில் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.


இதேபோல புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ அரங்குள நாதர் பெரியநாயகி அம்பாள் கோவிலில் புரட்டாசி மாத பிரதோஷ விழாவை முன்னிட்டு சிவன் சன்னதியில் உள்ள நந்தியம் பகவானுக்கு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்று மலர் அலங்காரம் செய்யப்பட்டது. 
காளை வானத்தில் சுவாமி அம்பாளை எழுந்தருள செய்து பக்தர்கள் சிவசிவ ஹர ஹர கோஷத்துடன் மூன்று முறை பிரகார உலா நடைபெற்றது. 

இதேபோல் திருவுடையார்பட்டி திருமூலநாதர் திரிபுரசுந்தரி அம்பாள் கோவில், திருக்கட்டளை சோமசுந்தரீஸ்வரர் மங்களநாயகி அம்பாள் கோவில், திருமலை ராய சமுத்திரம் கதிர்காமேஸ்வரர் கதிர்காமேஸ்வரி அம்பாள் கோவில், பாளையூர் பழங்கரை புராதன ஈஸ்வரர் கோவில், விஜய ரகுநாதபுரம் சிவன் கோவில் உள்ளிட்ட கோவில்களில் பிரதோஷ விழா நடைபெற்றது.

கூத்தாநல்லூர் அருகே உள்ள, வேளுக்குடியில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான ருத்ரகோடீஸ்வரர் கோவிலில்  பிரதோச வழிபாடு நடைபெற்றது. இதில், ருத்ரகோடீஸ்வரருக்கும், நந்தி பகவானுக்கும் 108லிட்டர் பால் மற்றும் தயிர், தேன், இளநீர், சந்தனம், பன்னீர், பஞ்சாமிர்தம், மஞ்சள் பொடி வாசனை திரவியங்களால் அபிசேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து, சாமி வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.